திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (டிசம்பர்.1) 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், நீதிமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், ரஜினி, விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் வீடுகள், பத்திரிகை அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது.
அந்தவகையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டா மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 7 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் 28 மற்றும் நவம்பர் 19ம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
