பழங்குடியினர் நிலம் ஆக்கிரமிப்பு: நித்தி சீடர்களை நாடு கடத்திய பொலிவியா

Published On:

| By Kavi

நித்யானந்தா சீடர்கள் 20 பேரை நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு தெரிவித்துள்ளது. Bolivia deports Nithi followers

பாலியல் வழக்கு, கொலை முயற்சி, கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக சொல்லும் நித்யானந்தா, இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.  இண்டர்போல் அவரை தேடி வருகிறது.

அவர் மீதான வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

இவருக்கு எதிரான வழக்கு ஒன்றில், தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.

இப்படி தேடப்படும் நபரான நித்யானந்தா, சமீபத்தில் தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் அமேசான் காடுகளில் பழங்குடியின நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்திருக்கிறார்.

பாயர், கயூபா, எசி இஹா ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கும் அமேசான் காடு நிலத்தை 1000 ஆண்டுகளுக்கு 8 லட்சம் ரூபாய் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வந்தன.

அதோடு அங்கிருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழங்குடியின மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்ததும் பொலிவிய அரசும், பழங்குடி மக்களின் கூட்டமைப்பும் இந்த ஒப்பந்தம் செல்லாது, பழங்குடி மக்களுக்கு ஒரு கற்பனையான நாட்டுடன் வர்த்தகம் செய்ய உரிமை இல்லை என்றும் கூறியிருக்கிறது. 

பொலிவியாவில் உள்ள குடியேற்றத்துறை இயக்குனர் கேத்தரின் கால்டெரோன் கூறுகையில், “இந்த குழு பல்வேறு எண்ட்ரி பாயிண்ட் வழியாக வெவ்வேறு நேரங்களில் பொலிவியாவிற்குள் சுற்றுலா பயணிகளாக நுழைந்திருக்கிறது. 

சிலர் கடந்த நவம்வர் 2024 முதல் பொலிவியாவில் இருந்து வருகின்றனர். சிலர் 2025 ஜனவரியில் நுழைந்திருக்கின்றனர்.  இவர்கள் பொலிவியா பழங்குடியின மக்களின் நல்லெண்ணத்தை மீறுவதோடு, அவர்களின் உரிமைகளையும் மீற முயன்றனர். பழங்குடியின சமூகத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றனர்.

சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்த அவர்களை உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைலாசா என்ற கற்பனையான நாட்டை சேர்ந்த 20 உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பொலிவியா அரசாங்கத்திற்கும் ‘கைலாசா தேசம்’ என்று அழைக்கப்படும் இந்த கற்பனையான நாட்டுக்கும் இடையே எந்த உறவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் ஊடகமான La República, ”கைலாசாவுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என்று பொலிவியா வெளியுறவு அமைச்சகம் கூறியது” என்று தெரிவித்துள்ளது.

 “இந்த வகையான மறைமுகமான ஒப்பந்தங்களை அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை, ஒருபோதும் அங்கீகரிக்கவும் செய்யாது.

பழங்குடித் தலைவர்களுக்கும் கற்பனையான கைலாசா நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று பொலிவியாவின் கிராமப்புற மேம்பாடு மற்றும் நில அமைச்சர் யாமில் புளோரஸ் கூறியுள்ளார். Bolivia deports Nithi followers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share