ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்களது புறப்படும் இடத்தை மாற்றி கொள்ளும் வசதி இருந்த நிலையில் ரயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது ரயிலில் ‘சார்ட்’ தயாரிப்பதற்கு முன்பு தாங்கள் ரயில் ஏறும் ரயில் நிலையத்தை ஐஆர்சிடிசி வெப்சைட் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த வசதி பொது மற்றும் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பொருந்தும்.
பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும்போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த வசதி 2019ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் தொடர்கிறது.
இந்த நிலையில் இனி ரயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இணையதளமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி (www.irctc.co.in) இணையதளத்தில் சென்று அங்கே மெயின் மெனுவுக்கு கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டு இருக்கும் கவுன்டர் டிக்கெட் போர்டிங் பாயின்ட் சேஞ்ச் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும். அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட செல்போன் எண்ணை அதில் வரும் ஓடிபியைப் பதிவிட்டால் டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றும் வாய்ப்பு ஏற்படும்.
இதனால் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டுவிட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்பட மாட்டாது. இதற்கு முன்பு ரயில் ஏறுபவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ரயில் நிலையத்துக்கு நேரில் எழுதி கொடுத்தால்தான் ஏறும் ரயில் நிலையத்தை மாற்ற முடியும் என்ற சிரமம் இருந்ததால் தற்போது அது எளிதாக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரயில் பயணிகளுக்கான டிக்கெட்களில் தற்போது 65 சதவிகிதம் ஆன்லைன் மூலம் தான் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**ராஜ்**