மெரினாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற கார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Blue car threatens public at Marina
சென்னை மெரினா கடற்கரை எப்போதும் பிஸியாக, அதிகமானோர் வந்து செல்லும் முக்கியமான பகுதியாகும். இங்கு இன்று (ஜூன் 20) காலை பலரும் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு கார் அங்கும் இங்கும் சென்றுள்ளது.
ஹுண்டாய் எலன்ட்ரா ரக நீல நிறத்திலான கார் காமராஜர் சாலை – விவேகானந்தர் இல்லம் அருகே எதிர்புறத்தில் இருந்து கடற்கரை சாலைக்குள் சென்றபோது, திடீரென பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்றவாறு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது.

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த காவலர் அந்த காரை மடக்கி நிறுத்தினார். அவர் பைக்கில் இருந்து இறங்கி சென்று கேட்பதற்குள், கார் ஓட்டுநர் பின்னோக்கி எடுத்து மீண்டும் வேகமாக விரட்டி ஓட்டுகிறார். இதனால் அந்த காவலர் நகர்ந்து சென்றுவிட்டார்.
பின்னர் அந்த காரை பிடிக்க அந்த பகுதியில் இருந்த போலீசார் முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் தப்பித்துவிட்டது.
அந்த கார் எண் TN 07 CS 1315 என்பது தெரியவந்துள்ளது. இந்த பதிவெண்-படி, ஹுண்டாய் எலன்ட்ரா கார், மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் என்பவரது என்று தெரியவருகிறது.
இன்று காலை மெரினா கடற்கரையில் அந்த கார் போக்கு காட்டிய போது, அதனுள் ஒரு ஆண், இரண்டு பெண்கள் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அவர்கள் யார்? எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர். Blue car threatens public at Marina
