ADVERTISEMENT

தமிழகத்திலும் ‘SIR’ பணிச்சுமையால் BLO தற்கொலை? – காவல்துறை விசாரணை

Published On:

| By Pandeeswari Gurusamy

BLO commits suicide due to 'SIR' workload

திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் BLO தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,

தமிழகம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் கடந்த நவம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று (நவம்பர் 20) மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சிவனார்த்தங்கள் கிராமத்தில் கிராம உதவியாளராக ஜாகிதா பேகம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் SIR பணிகளில் ஜாகிதா பேகம் ஈடுபட்டிருந்தார். SIR பணிகள் தொடங்கிய நாளில் இருந்தே வேலை அழுத்தத்தால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜாகிதா பேகம் 800 படிவங்கள் முடிக்க வேண்டிய நிலையில் வெறும் 80 படிவங்களுக்கான வேலைகளை மட்டுமே முடித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜாகிதா பேகத்தை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜாகிதா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கிராம உதவியாளர் பணி சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜாகிதா பேகத்தின் தற்கொலைக்கு SIR பணிகள்தான் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே SIR பணிகளில் ஈடுபட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த அனீஷ், மத்திய பிரதேசத்தை சேர்ந்த உதயபான் சிகாரோ, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜாங்கிட் என 3 BLOக்கள் வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share