இஸ்ரேல், ஈரான் இருநாடுகளும் விடிய விடிய மாறி மாறி ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகள் தீ பற்றி எரிகின்றன. Blazing Oil Depots in Iran After Israel’s Midnight Attack
அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் அணு விஞ்ஞானிகள், புரட்சிக் காவல் படை ராணுவத்தின் தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கி வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவும் விடிய விடிய இஸ்ரேல், ஈரான் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின.
- இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மேற்கு பகுதியில் அதிபயங்கர குண்டு வெடிப்பு சப்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள சஹாரான் கச்சா எண்ணெய் கிடங்கு பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகையுடன் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
- ஈரானின் மொத்தம் உள்ள 31 மாகாணங்களில் 18 மாகாணங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
- டெஹ்ரானில் உள்ள மிக முக்கியமான ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து சனிக்கிழமை இரவு இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகமும் சேதமடைந்தது.
- ‘ஈரான் தலைநகர் டெஹ்ரான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது’ என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் Israel Katz தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான True Promise 3 ராணுவ நடவடிக்கை தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுத் தலைவர் Ebrahim Rezaei இதனைத் தெரிவித்துள்ளார்.
- மேலும், தங்களது ராணுவம் வீசிய ஏவுகணைகளை அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இடைமறித்துத் தாக்கி அழித்ததாகவும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
- ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ன் தென்பகுதியில் 35 பொதுமக்களைக் காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலின் மிக முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி மையமான Weizmann Institute for Science சேதமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை
இதனிடையே அணு ஆயுத குறைப்பு தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஓமன், கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வர வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது; இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இஸ்ரேல் தமது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.