கேரளாவில் பிரார்த்தனை கூடத்தில் இன்று (அக்டோபர் 29) காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 40 பேர் படுகாயமும், அதில் 5 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கொச்சி களமசேரியில் உள்ள கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் பிரார்த்தனைக்காக 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.
அதன்படி கடைசி நாளான இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிபொருள் வெடித்துள்ளது.
இதனால் அச்சமடைந்த மக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். மூடிய அரங்கில் நிகழ்ந்த இந்த வெடி விபத்தில் பெண் ஒருவர் உடல் கருகி பலியாகி உள்ளார். மேலும் 40பேர் படுகாயங்களுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
வெடி விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த வெடி விபத்து எப்படி ஏற்பட்டது? வெடிகுண்டுகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணத்தால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வெடி விபத்து நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு!
விபத்தை தொடர்ந்து விடுமுறையில் இருக்கும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் களமச்சேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கூடுதல் வசதிகளை தயார் செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.
துரதிருஷ்டவசமான சம்பவம்!
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டிஜிபியிடம் பேசினேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் கிடைக்கும்” என்றார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அங்குள்ள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பிரார்த்தனை அரங்கில் சுமார் 2000 பேர் கூடியிருந்தனர். அகமலையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றிருந்தனர். அரங்கின் உள்ளே மூன்று முறை குண்டுகள் வெடித்தது” என்று அச்சத்துடன் கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லியோ வெற்றி விழா: தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய காவல்துறை!
மாணவர்களுக்காக ரூ.100 கோடி… டிவிஎஸ் நிறுவனத்திற்கு முதல்வர் பாராட்டு!
