மருதமலையில் நேற்று பிடிபட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் யானை காட்டெருமை சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி குடியிருப்புப் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை குட்டி ஒன்றை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். இந்த குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், இன்று அதிகாலை குட்டி உயிரிழந்துள்ளது.

ADVERTISEMENT

மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸி காலனி பகுதியில் உள்ள குடியிருப்பில் டிசம்பர் 24 காலையில் கருஞ்சிறுத்தை குட்டி தென்பட்டது. யாரும் வசிக்காத வீட்டிற்குள் நுழைந்த தாய் சிறுத்தை, குட்டியை அங்கே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் குட்டியை பாதுகாப்பாக மீட்டு, தாயுடன் சேர்க்கும் நோக்கில் இயற்கை கற்களால் ஆன குகை போன்ற பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி, குட்டியை தாயுடன் இணைக்கும் பணி நேற்று காலை முதல் நள்ளிரவு வரை தீவிரமாக நடைபெற்றது. சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கேமரா பதிவுகளில் இரண்டு சிறுத்தைகள் (தாய் மற்றும் வேறொரு சிறுத்தை) குகை அருகே வந்து செல்வதும், குட்டி குகையை விட்டு வெளியேறி நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் குகையில் குட்டி இல்லை என்பது உறுதியானது. உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காலை 5.30 மணியளவில் இயற்கையான குகைக்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் குட்டி படுத்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அருகே சென்று பரிசோதித்தபோது, குட்டி அசைவின்றி உயிரிழந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் சிறுத்தை குட்டி இறப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனை மூலமே தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது. வழிகாட்டுதலின்படி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கருஞ்சிறுத்தை அரிய வகை விலங்கு ஆகும். மெலனிசம் எனும் மரபணு மாற்றம் காரணமாக இவை கருப்பு நிறத்தில் காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share