மோடி உணவகம்… மீண்டும் படகு போக்குவரத்து: தமிழிசையின் “அக்கா 1825” தேர்தல் அறிக்கை!

Published On:

| By indhu

தென்சென்னை தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். “அக்கா 1825” என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாள் தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என கணக்கிட்டு 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் “அக்கா 1825” என்ற தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

இதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு,

  • தென்சென்னை தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
  • மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக தென்சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்த நடவடிக்கை
  • பெண்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • நகர்புறத்தில் வாழும் பெண்களுக்கு என தனித் திட்டங்கள் கொண்டுவரப்படும்
  • சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்
  • அம்மா உணவகம் போன்று ரயில் நிலையங்களில் மோடி உணவகம்
  • குப்பைகளை அகற்ற விஞ்ஞானப்பூர்வமான திட்டம்
  • மழைநீர் வடிகால் அமைப்பதற்கான திட்டம்
  • ஒன்றிணைந்த மீனவ கிராம திட்டம்
  • மீனவர்களுக்கான தனி ஆலோசனை குழு
  • ஐ.டி. கம்பெனி வளர்ச்சிகளுக்காக தனி ஆலோசனை குழு
  • தென்சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்தனியாக பாராளுமன்ற அலுவலகம் செயல்படும்
  • வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை
  • 6 பகுதிகளை இணைக்கும் “லூப் பஸ்” திட்டம்
  • இ-பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும்
  • சென்னை – கடலூர் இடையே படகு போக்குவரத்து
  • தென் சென்னை தொகுதிக்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 3 ஜிம் கொண்டு வரப்படும்
  • சாக்கடை கழிவுகள் மற்றும் மழைநீர் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை நாம் வளர்ச்சியடைந்த பகுதியாகத் தான் பார்த்து வருகிறோம்.

ஆனால், பிரச்சாரத்திற்காக நாங்கள் தென்சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்றபோது நாங்கள் வளர்ச்சியடைந்த தென்சென்னையை பார்க்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்சென்னை, குப்பைகளால் பாதிக்கப்பட்ட தென்சென்னை, வடிகால் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தென்சென்னை, விஞ்ஞான ரீதியாக எந்த வளர்ச்சி திட்டமும் அமல்படுத்தப்படாத தென்சென்னையைத் தான் பார்த்தோம்.

தென்சென்னை தொகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த தொகுதியில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

“River Basin System” என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் அந்த திட்டத்தால் பயனடைந்துள்ளன. ஆனால், சென்னையில் அத்திட்டம் கொண்டுவரப்படவில்லை. அத்திட்டம் இங்கு  கொண்டுவரப்பட்டு இருந்தால் வெள்ள பாதிப்பு இருந்திருக்காது.

தென்சென்னை தொகுதியில் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. அவர்கள் இதுவரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கான அடிப்படை வசதி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

மீனவர்களுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும். மீனவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் தென்சென்னை தொகுதியில் எந்தவித தொலைநோக்கு திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

பிரச்சாரத்திற்காக நாங்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் மக்கள் என்னை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன்.

மக்கள் என்னை தொடர்பு கொள்ளும்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க நான் விரும்பவில்லை. அனைத்து மக்களும் தொடர்பு கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே நான் விரும்புகிறேன்.

இரு மாநிலங்களில் ஆளுநராக இருந்த நான் மீண்டும் அக்காவாக அரசியலுக்கு வந்திருப்பது மக்களுக்கு சேவையாற்றத்தான். அரசியலில் வேறு எந்த எதிர்ப்பார்ப்பும் எனக்கு கிடையாது” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எங்களுக்கு இத்தனை வயது தான் வித்தியாசம்” – உண்மையை உடைத்த இந்திரஜா சங்கர்..!

மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க சதி: மோடியை சாடிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share