வாரணாசியில் மோடியின் வெற்றி மோசடியானது : உபி பாஜக உறுப்பினர் வீடியோ வைரல்!

Published On:

| By Kavi

பிரதமர் மோடியின் வாரணாசி வெற்றிக்காக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக உத்தரப் பிரதேச பாஜக உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

ஜூன் 4ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4ஆவது சுற்று வரை முன்னிலை வகித்தார்.

மோடிக்கும், அஜய் ராய்க்கு இடையே காலை 8 மணி முதல் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் 11 மணியளவில் தான் முன்னிலை வகிக்கத் தொடங்கினார் மோடி.

இந்நிலையில் 6,12,970 வாக்குகளை பெற்ற மோடி, 1,52,513 வாக்கு வித்தியாசத்தில் அஜய் ராயை தோற்கடித்தார். அஜய் 4,60,457 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால் இந்த வாக்கு வித்தியாசம் என்பது கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தலில் பதிவானதை விட மிகக் குறைவாகும்.

2014 இல் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019 இல் 5,22,116 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற பிரதமர் மோடி இம்முறை குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றது தேசிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 11) ரேபரேலியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாரணாசியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் பிரதமர் மோடி தோற்று போயிருப்பார் என்று கூறியிருந்தார்.

இந்தசூழலில், பிரதமர் மோடி வெற்றி பெற்றது குறித்து உத்தரப் பிரதேசம் பாஜக உறுப்பினர் உஜ்வால் குமார் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடிக்காக வாக்குகள் “ஏற்பாடு” செய்யப்பட்ட பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருப்பதாக கூறும் உஜ்வல் குமார், “என்னை அமைதியாக இருக்கும்படி நீங்கள் மிரட்ட முடியாது. நான் அமைதியாக இருக்க வேண்டுமெனில் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தூக்கிலிட்டாலும் நான் அமைதியாக இருக்கமாட்டேன்.

வாஜ்பாயின் பாஜகவை மீண்டும் கொண்டு வர வேண்டும். 100 புதிய உறுப்பினர்களை இழந்தாலும் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினரை இழக்கக் கூடாது என வாஜ்பாய் செயல்பட்டார்.

நரேந்திர மோடியின் வெற்றி தோல்விக்கு சமம். பின்னடைவைச் சந்தித்த அவருக்காக வாக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் மாலை 4 மணிக்குப் பிறகு எண்ணிக்கை மெதுவாக இருந்தது. தேர்தல் ஆணையம் முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மோடியின் இருக்கையை காப்பாற்ற இந்த எண்ணிக்கையில் மோசடி செய்தனர்” என்று உஜ்வால் குமார் வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மாணவர்களுக்கு கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு!

ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share