பாஜக எந்தக் கட்சியையும் அழித்து வளராது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். BJP will not destroying any party- Annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஐந்தில் மூன்று ஜெயிக்காமல் ஆட்சிக்கு வர முடியாது!
அப்போது அவர், “இந்தியாவின் எவ்வளவு மோசமான முதலமைச்சராக இருந்தாலும், 40 சதவீதம் ஆதரவு கிடைக்கும். ஆனால் சி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு 27% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான்கில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர். இதுதான் தமிழகத்தின் நிலை.
தேசிய ஜனநாயக கூட்டணி, தென் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களில் ஜெயிக்காமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. தென் தமிழகத்தின் சூழல், மதுரை வட்டாரத் தொகுதிகள் மற்றும் கொங்கு பகுதி தொகுதிகளின் தனித்தன்மை குறித்து டெல்லியில் கட்சித் தலைமையுடன் ஆலோசித்தேன். ஆனால், டெல்லியில் என்ன பேசினேன் என்பதை வெளியிட்டால் தவறாகப் போய்விடும்.
ஜாதிகள் வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால், தேர்தலில் ஜாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்சியின் தலைவராகவும் தொண்டனாகவும் மைக்ரோ லெவலில் இவை அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணியா? BJP will not destroying any party- Annamalai
கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பேசிய உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கூட்டணி குறித்து எங்கள் தலைவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன். அண்ணாமலை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. எனக்கு பாஜக, தமிழக நலன் முதன்மையானது. தொண்டனாகப் பணியாற்றத் தயார் என்று டெல்லியில் தெரிவித்துள்ளேன்.
என்னை வருங்காலத்தில் பார்ப்பீர்கள். ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2. சொந்தமாக நின்று நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை.
பாஜகவின் எல்லா முடிவுகளும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்.
பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வர உள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழகப் பயணம் இதுவாகும்.
திரைமறைவில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை!
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும் பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் இல்லை. திமுகவில் ஸ்டாலின் வேட்பாளர். விஜய் தன் கட்சியில் வேட்பாளர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர். ஆனால், பா.ஜ.க யாரையும் முதல்வராக முன்மொழிவதில்லை. இருப்பினும், தமிழகத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. என்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை. பாஜக எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில் எந்தவிதத்திலும் தவறில்லை. செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்கள் எழுதப்படுகின்றன. பாஜகவுக்கு யாரையும் திரைமறைவில் சந்தித்து பேச வேண்டிய அவசியமில்லை.
பாஜக இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால், பாஜகவும் அழிந்துவிடும் என்று தான் சொல்லி வருகிறேன். பாஜக எந்தக் கட்சியையும் அழித்து வளராது” என அண்ணாமலை தெரிவித்தார்.