திமுக மட்டுமல்ல அதிமுக வையும் மிரட்ட அமலாக்கத்துறையை பா ஜ க பயன்படுத்தி வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூன் 14) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“செந்தில் பாலாஜி கைது ஜனநாயக படுகொலை. பாஜகவின் சர்வாதிகார அரசியலின் வெளிப்பாடு. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளின் உச்சம்.
நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை அமலாக்கத்துறை செயல்படுத்த முயன்றுள்ளது.
இந்த கைது நடவடிக்கையில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
மேற்குவங்கம், டெல்லி, பீகார், ஜார்கண்ட் போன்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை அனுப்பி மிரட்டுவதை போல தமிழகத்திலும் முயற்சித்திருக்கிறார்கள்.
சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை பா ஜ க வின் கிளை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை ஒரே இடத்தில் அமர வைத்து விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை துன்புறுத்தியிருக்கிறது.
அவர் உடல்நிலை பாதிக்கும் அளவுக்கு மனிதாபிமானமில்லாமல் தங்களது எஜமானர்கள் மோடி, அமித்ஷா போன்றவர்களை திருப்திப்படுத்தும் கேடுகெட்ட செயலை அமலாக்கத்துறை செய்திருக்கிறது.
திமுக மட்டுமல்ல அதிமுகவையும் மிரட்ட அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்தி வருகிறது. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு உங்களையும் கைது செய்வோம் என்று பாஜக மிரட்டியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்தபோதும் திமுக தான் எதிர்தது குரல் கொடுத்தது.
திமுகவை ஊழல் நிறைந்த இயக்கமாக காட்டுவதற்கு முயன்று ஒவ்வொருவரும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளும் தோற்றுப்போகும் என்பதில் எள்ளளவும் அச்சமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கி
ணைப்பதில் முதல்வர் ஸ்டாலின் இயங்கி வருகிறார். அதனால் பதட்டத்தில் தவிக்கும் பாஜக அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோவை மண்டலத்தில் திமுகவின் வெற்றிக்கு செந்தில் பாலாஜி காரணமாக இருந்தார். 2024-ஆம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்குவோம் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி நிலைக்கண்ணாடியை பார்த்து தனக்கு அருகதை இருக்கிறதா என்பதை யோசித்திருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது என்பதை அவர் யோசித்து பார்த்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
இந்தோனேசியா ஓபன்: இந்திய வீரர்கள் மோதல்!
”கெட் வெல் சூன்”: ரிஷப் பண்டை உற்சாகப்படுத்தும் ரசிகர்கள்

