பாமகவின் உட்கட்சி மோதலில் பாஜக தலையிட்டு தீர்வு காண்பதற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை வந்துள்ள டாக்டர் ராமதாஸ், பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தியை இன்று ஜூன் 7-ந் தேதி மாலை சந்தித்து பேசுகிறார். BJP Steps Into PMK Clash
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உக்கிரமாக நடந்து வருகிறது. இதனால் பாமக இரண்டாக பிளவுபடும் நிலையில் உள்ளது.
பாமகவின் உட்கட்சி விவகாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பி தலையிட வைத்தது பாஜக. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற ஆடிட்டர் குருமூர்த்தி, டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் என இரண்டாக பிளவுபட்டு நிற்க காரணமாக இருந்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி. பின்னர் பாஜக சார்பில் அதிமுக அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர்தான். தற்போது இருவருமே பாமக விவகாரங்களில் தலையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டுள்ளார். சென்னையில் தங்கி இருக்கும் டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் என்கின்றன பாமக வட்டாரங்கள்.
மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியிடம், பாமகவின் நிறுவனர்- தலைவராக தொடர்ந்து தாமே நீடிப்பேன்; சிறிது காலத்துக்கு பின்னரே அன்புமணி மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவார்; பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பதவி தரப்பட வேண்டும் என்பதுடன் ‘நிதி சார்ந்த’ விவகாரங்களையும் ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பேசியிருந்தாராம். இதனையே இன்றைய சென்னை சந்திப்பிலும் ராமதாஸ் வலியுறுத்த இருக்கிறாராம்.
ஆனால் அன்புமணியோ, பாமக தலைவர் பதவியை மீண்டும் தருவதாக இப்போது வாக்குறுதி தருவார் ராமதாஸ். ஆனால் நிச்சயம் தமக்கு அவர் தரமாட்டார் என குருமூர்த்தி தரப்புக்கு சொல்லி அனுப்பி இருக்கிறாராம்.
இதனால் சென்னையில் நடைபெறும் ராமதாஸ்- குருமூர்த்தி சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.