விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை முன்வைத்து தங்களுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்
வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுவாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்கள் தணிக்கைத் துறையால் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட படத்தில் இடம்பெறும் காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
அதை சட்ட விதிகளுக்கு உட்பட்டு, திரைப்படத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தணிக்கைத் துறை சான்றிதழ்களை வழங்கும்.
அதன்படி ஜனநாயகன் படத்தில் யுஏ சான்றிதழ் வழங்குவதற்கு சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கைத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் அதை நீக்குவதற்கு படக்குழுவினர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதுதான் தற்போதைய பிரச்சினை.இதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
திரைப்படத் துறையில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாரதிய ஜனதாவுக்கு கிடையாது.
ஆனால் தேர்தலை மையமாக வைத்து மக்களை திசை திருப்புவதற்காக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு அவதூறு பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இந்த உண்மையை உணர்ந்த நடிகர் விஜய் தரப்பினரும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயலக்கூடாது.
விரைவில் ஜனநாயகன் திரைப்படமும் வெளி வர வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இவ்வாறு ஏ.என்.எஸ். பிரசாத் கூறியுள்ளார்.
