எம்.எல்.ஏ-க்கள்- பெண்கள்- தலித் இல்லை… பாஜக ஆறு பேர் குழு மீது புகார்கள்!

Published On:

| By Selvam

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பயில்வதற்காக, லண்டன் சென்றுள்ளார்.

இந்தநிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு  நேற்று (ஆகஸ்ட் 30)  அமைக்கப்பட்டது.

இந்த குழுவில், மாநில துணை தலைவர்களான சக்கரவர்த்தி, கனக சபாபதி, மாநில பொதுச்செயலாளர்களான முருகானந்தம், ராம ஸ்ரீனிவாசன், மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பு குழு தமிழக பாஜகவிற்குள் பெரும் சலசலப்புகளை உண்டாக்கியிருக்கிறது.

இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது,

“அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில். ’செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. அதில் தேசிய அளவில் பிரதமர் மோடி தன்னை மீண்டும் உறுப்பினராக இணைத்துக் கொள்கிறார். அதேபோல தமிழ்நாட்டில் மூத்த தலைவர் அண்ணன் ஹெச்.ராஜா தன்னை முதல் உறுப்பினராக இணைத்துக் கொள்கிறார்’  என்று தெரிவித்தார் .அப்போதே ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ராஜாதான் தலைவர் என்று சமிக்ஞை கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.  மேலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள கனகசபாபதி தேசிய அளவில் பி.எல். சந்தோஷோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.  இந்நிலையில் அண்ணாமலையின் தேர்வாகத்தான் இந்த குழு அமைந்திருக்கிறது.

ஆறு பேர் குழுவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான பொன்னார், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை ஆகியோர் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்காக அவர்களும் தீவிர முயற்சி எடுத்தார்கள். ஆனால், அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்தபோதே இவர்களில் சிலர் அவருக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வந்தனர். இதனால் இவர்கள் யாரும் இந்த குழுவில் இடம்பெற அண்ணாமலை விரும்பவில்லை.

இதனால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனிடம் ஆலோசனை செய்த அண்ணாமலை, ஹெச்.ராஜா தலைமையில் குழுவை அமைத்து டெல்லிக்கு அனுப்பியுள்ளார். அதை டெல்லி ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்ட பிறகு பாஜக சீனியர்கள் பலரும் டெல்லி தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதாவது… திமுகவை தலித் விரோத கட்சி என்று தொடர்ந்து நாம் குற்றம்சாட்டி வருகிறோம். ஆனால், இந்த ஒருங்கிணைப்பு குழுவில் ஒரு தலித் கூட இல்லை. அதேபோல பெண்கள் பிரதிநிதித்துவமும் இல்லை. ஏன் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட  இந்தக் குழுவில் இல்லை.

பாஜகவில் முக்கியத்துவம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிற கட்சிகளில் இருந்து நமது கட்சிக்கு வந்த வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகியோர்களது பெயரும் இடம்பெறவில்லை என்பதை டெல்லிக்கு சுட்டிக் காட்டியுள்ளார்கள்” என்கிறார்கள்.

இந்த ஒருங்கிணைக்கு குழுவினர் பாஜகவின்  மாநில மையக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அதுமட்டுமல்ல… ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அளவில் கட்சியை மண்டலங்களாக பிரித்து ஒன்று அல்லது இரண்டு மண்டலங்கள் ஒப்படைக்கப்படும். அவற்றையும் அவர்கள் கையாள வேண்டும். என்றும் பாஜக தலைமையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேந்தன், செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஃபார்முலா 4 கார் ரேஸ் முதல் ’GOAT’ 4வது சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ராஜ்கிரா பர்ஃபி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share