சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்த, ஐடி, இடி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் குரங்கு சாவடி அருகே பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு இல்லத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரி கூடுதல் உதவி இயக்குனர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் பறக்கும் படையினர் சுரேஷ்பாபு இல்லத்தில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பணம், பரிசு பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இருப்பினும் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் வந்திருந்த சூரமங்கலம் உதவி ஆணையாளர் நிலவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சுரேஷ்பாபு வீட்டில் மீண்டும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறி வீட்டின் உள்ளே நுழைய முயன்றனர். வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு மீண்டும் காவல்துறை எதற்காக சோதனை நடத்த வேண்டும் என்று அங்கிருந்த பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு கூறும் போது, “தேர்தலுக்கு பணம் கொடுக்க வீட்டில் பணம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வருமானவரித்துறையினர் சென்றனர். ஆனால், பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினர் சோதனை நடத்த வேண்டும் என கூறுவது தேவையற்றது. ஆளும் திமுக அரசு தூண்டுதல் பேரில் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் காவல்துறையினர் செயல்படுகின்றனர். அனுமதி இல்லாமல் காவல்துறையினர் மீண்டும் சோதனை நடத்தக்கூடாது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ள 10 புதிய ரயில்கள் எவை, எவை?