ஆம்ஸ்ட்ராங் கொலை தாக்கம் : பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்!

Published On:

| By christopher

Remove mail from BJP!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளர் அஞ்சலையை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பாஜக தலைமை இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து 5 நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.  மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும் மற்றும் வழக்கறிஞருமான மலர்கொடி, தமாக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் வட சென்னை பாஜக மகளிரணி செயலாளரான அஞ்சலை தலைமறைவாகியுள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அஞ்சலை? 

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை வடசென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்தவர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டவர். இவர் திடீரென பாஜக ஐக்கியமாகி வடசென்னை மகளிரணி செயலாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: ஆட்டம் காணும் ஆளுநர் பதவி.. மோடி, அமித் ஷாவிடம் ஓடிய ஆர்.என்.ரவி – ஸ்டாலின் வைத்த செம்ம ட்விஸ்ட்!

4 சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share