வெளியே சூறாவளி… உள்ளே தெனாலி… கதறிய கரு. நாகராஜன் வாய்ஸ் மெசேஜ் ஆதாரங்கள்!

Published On:

| By Aara

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் கட்சியில் இருக்கக்கூடிய ராஜா உள்ளிட்ட தலைவர்கள் மேடைகளிலும் பிரஸ் மீட்களிலும் மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். பிற அரசியல் கட்சித் தலைவர்களை முதலமைச்சரை, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஒருமையில் கூட பகிரங்கமாக விமர்சிக்கிறார்கள்.

அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு போராட்டம் என்று வரும்போது பாஜக எவ்வாறு இந்த வீரத்தை காட்டுகிறது என்று அந்தக் கட்சிக்குள்ளேயே முக்கியமான நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்னையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், மற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் போராட்டம் அண்ணாமலையால் அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் 600 ஆண்கள் 100 பெண்கள் என 700 பேர் தான் கைதானார்கள். அதுவும் மாலை 6 மணிக்கு மேல் ஏன் வெளியே அனுப்பவில்லை எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு என அண்ணாமலை காவல்துறையுடன் நடத்திய வாக்குவாதம் வீடியோவாக பரவியது.

இந்த முற்றுகைப் போராட்டத்தை முறையாக திட்டமிட்டு ஒருங்கிணைக்காதது தான் போராட்டம் பிசுபிசுத்ததிற்கு காரணம் என பாஜகவுக்கு உள்ளேயே சில குரல்கள் எழுந்தன.

அடுத்த ஒரு வாரத்தில் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்பு பற்றிய 7 மாநில பிரதிநிதிகளின் கூட்டம் நடந்த அன்று, பாரதிய ஜனதா கட்சி திமுக அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அன்றைக்கு தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் இடம் பெற்று இருக்கிற வாட்ஸ் அப் குரூப்பில் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

அதாவது சென்னை மாநகராட்சியில் கழிவறை டெண்டர் விடுவதில் சுமார் 430 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியை அப்படியே போஸ்டர் வடிவாக ஆக்கி, அப்பாவின் கழிப்பறை ஊழல் என்ற தலைப்பிட்டு வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்திருந்தார் கரு நாகராஜன்.

மேலும் தன்னுடைய குரலில் ஒரு வாய்ஸ் மெசேஜும் அந்த whatsapp குரூப்பிலேயே அவர் பகிர்ந்தார்.

அதில், ‘அப்பாவின் அபார ஊழல் என்ற இந்த போஸ்டரை நமது மாவட்ட தலைவர்கள் சென்னை மாநகராட்சியில இருக்கக்கூடிய பொது கழிவறைகளில் வாசலில் போஸ்டர்களாக ஒட்ட வேண்டும். நான்கைந்து பேர்களாக சென்று கழிவறை வாசல்களில் இந்த போஸ்டரை ஒட்டி விடுங்கள். நேற்று சொல்லணும்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு ஆர்ப்பாட்டம் இருக்கிறதுனால நேத்து சொல்லல. இதை ஏ3 சைஸுக்கு பிரிண்ட் அவுட் எடுங்க. bjp protest annamalai karu nagarajan

ஏன்னா இதுல நிறைய விஷயம் இருக்கு. அதனால ஏ3  பிரிண்ட் எடுத்து இன்னிக்கு நைட்டு இதை ஒட்டிடுங்க. இதை மாநில தலைமை சொல்லி இருக்காங்க’ என்று அந்த வாய்ஸ் மெசேஜில் குரல் கொடுத்திருந்தார் கரு நாகராஜன்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் அதே வாட்ஸ் அப் குரூப்பில் அதே கரு நாகராஜன் இன்னொரு குரல் பதிவை வெளியிட்டார்.

அதில், ‘மாவட்ட தலைவர்களே… ஒரு உடனடி அவசர வேண்டுகோள். கழிவறை ஊழல் தொடர்பான அந்த ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சியின் கழிவறைகளில் ஒட்டுவதற்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதை பொதுக்கூட்டங்கள் பிரச்சாரங்கள் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்லலாம். எனவே ஸ்டிக்கர்களை கழிவறைகளில் ஒட்ட   எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.  யாராவது பிரிண்ட் அவுட் எடுக்க அனுப்பி இருந்தால் கூட வேண்டாம் என்று திரும்ப வர சொல்லி விடுங்கள். மறந்து விடாதீர்கள். இது அவசர வேண்டுகோள். தலைவரின் உத்தரவை கேட்டு அடுத்த கட்டத்தை பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன்’ என்று அந்த வாய்ஸ் மெசேஜில் அப்படியே உல்டாவாக பேசி மெசேஜ் அனுப்பி இருந்தார் கரு நாகராஜன்.

மாவட்டத் தலைவர்களுக்கு குழப்பம்…. ‘இவர் என்ன கக்கூஸ்ல போஸ்டர் ஒட்டனுங்குறாரு.. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஒட்ட வேண்டாம்குறார். கட்சியில என்ன நடக்குதுன்னு தெரியலையே’  என்று  தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு விஷயம் தெரிந்து வேதனையோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன விஷயம்?

“மார்ச் 22 ஆம் தேதி பகலில் இந்த வாய்ஸ் மெசேஜை கரு நாகராஜன் whatsapp குரூப்பில் பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மாநில உளவுத்துறை இதை ஸ்மெல் செய்தது.

உடனடியாக கரு. நாகராஜனுக்கு ஒரு போலீஸ் அதிகாரி போன் செய்திருக்கிறார்.

‘கக்கூஸ்ல அந்த போஸ்டரை ஒட்ட சொல்லி நீங்க சொல்லி இருக்கீங்க. அப்படி ஒட்டினா உடனடியா கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவாங்க. அதுமட்டுமல்ல அந்த போஸ்டர்ல மேயர் பிரியா போட்டோவும் இருக்கு. அதனால பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலையும் கைது செஞ்சிருவாங்க. இதுக்கு மேல அந்த போராட்டத்தை நடத்தனுமான்னு நீங்க யோசிச்சுக்குங்க’ என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பயத்தில் ஆடிப் போன கரு நாகராஜன் உடனடியாக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது பற்றி ஆலோசித்தார்.

இதற்குப் பிறகுதான் உடனடியாக அப்படி ஒரு போராட்டத்தை நடத்த வேண்டாம், பொதுக்கூட்டம் பிரச்சாரங்களில் அதைக் கொண்டு செல்லலாம் யாரும் கழிவறையில் போஸ்டர் ஒட்டாதீங்க என்று கரு நாகராஜன்  பல்டி அடித்து அடுத்த குரல் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

எங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமா பேட்டி கொடுக்கிறார். இனி போலீஸ் அதிகாரிகளை தூங்க விட மாட்டேன் அப்படின்னு மார்ச் 17ஆம் தேதி மாலை பேட்டி கொடுத்தார். ஆனா போலீஸ் தான் பிஜேபி தலைவர்கள தூங்க விடாம பண்ணிக்கிட்டு இருக்காங்க.

போலீஸ்ல இருந்து வந்த போனுக்கு பிறகு போராட்டத்தையே கைவிட்டு ஒதுங்கிக்கிறாங்க. இதுதான் பிஜேபிகுள்ள இன்னைக்கு நடக்குது. bjp protest annamalai karu nagarajan

போலீஸ் அதிகாரி போன் பண்ணி அப்படியே சொல்லி இருந்தாலும், ‘கைது பண்ணிக்கங்க சார். நாங்க பாத்துக்கிறோம்’ என கரு நாகராஜன் பதிலளித்திருந்தால் அது மேடையில் பேசும் வீரத்துக்கு அழகாக இருந்திருக்கும்

ஆனால் வெளியே புலி உள்ளே எலி என்ற கதைதான் பாஜகவுக்குள். என்ன சார் பண்றது…” என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகளே. bjp protest annamalai karu nagarajan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share