மகாராஷ்டிர மாநில அரசியல் களத்தில், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் நிலையற்றத்தன்மை மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் எம்.பி.க்களுக்கு தலா ரூ.15 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அவர்கள் கட்சி மாறத் தூண்டப்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
சிவசேனா (UBT) கட்சியின் சில எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைமைக்கு எதிராகத் திரும்புவதாகவும், அவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா அணியில் இணைய முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்தச் சூழலில் உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ‘X’ தளத்தில், “Apna Sapna Money Money!” என்ற வாசகத்துடன், மகாராஷ்டிர எம்.பி.க்களை விலைக்கு வாங்க தலா ரூ.15 கோடி முன்பணமாக வழங்கப்படுவதாக பகிரங்கமாகப் பதிவிட்டார்.
ரூ.15 கோடி என்பது வெறும் முன்பணம் என்றும், முழு ஒப்பந்தம் இன்னும் பெரிய தொகையாக இருக்கலாம் என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் சில எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் ஆளும் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சனை என்ன?
உத்தவ் தாக்கரேவின் ஆதித்ய தாக்கரேவுக்கு தரப்படும் முக்கியத்துவம் கட்சியில் அதிகரித்து வருவது, சீனியர் எம்.பி.க்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என ஆளும் பாஜக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பயன்படுத்தி அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க ஆளும் பாஜக கூட்டணி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இப்படி நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த உத்தவ் தாக்கரே தரப்பு, கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் நடைபெறும் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ‘கொறடா’ (Whip) உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து கட்சித் தலைமையின் அழைப்பை மீறிச் செயல்படுபவர்கள் அல்லது கூட்டத்தை புறக்கணிப்பவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சிவசேனா (UBT) சார்பில் முறையான கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிவசேனா அமைச்சர் பிரதாப் சர்நாயக் இது குறித்துப் பேசுகையில், “யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. யாராவது சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் கொள்கைகளை நம்பி, ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் வர விரும்பினால், எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
மறுபுறம், சஞ்சய் ராவத் மிகவும் ஆவேசமாக, “எங்கள் வியர்வை மற்றும் இரத்தத்தால் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்” என்று எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் தற்போது நடப்பவை, 2022-ம் ஆண்டில் அரங்கேறிய பெரும் அரசியல் நாடகத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், சிவசேனாவின் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, திடீரென தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சூரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து கவுகாத்திக்குச் சென்று, பாஜகவுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி (MVA) ஆட்சியை கவிழ்த்தார்.
அப்போது. “சிவசேனா கட்சியின் உண்மையான வாரிசு நாங்கள் தான்” என்று ஷிண்டே தரப்பு உரிமை கொண்டாடிய நிலையில், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தன. அந்தத் தழும்புகள் இன்னும் ஆறாத நிலையில், இப்போது மீண்டும் அதேபோன்றதொரு ஆபத்து உத்தவ் தாக்கரே தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியும் சிதறிக் கொண்டிருக்கிறது. தற்போது சிவசேனாவின் உத்தவ் தாக்கரேயின் எம்.பி.க்களும் பாஜகவால் ”கொள்முதல்” செய்யப்பட உள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
