“டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி”: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On:

| By Monisha

BJP negotiated with Aam Aadmi MLAs

டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றது. இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர்கள் டெல்லியில் எங்கள் 7 எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, ’இன்னும் சில நாட்களில் நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்வோம், அதன் பிறகு எம்எல்ஏக்களிடம் விரிசலை ஏற்படுத்துவோம். 21 எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்களுடனும், மற்றவர்களுடனும் பேசி ஆட்சியைக் கவிழ்ப்போம். நீங்களும் வாருங்கள் உங்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து பாஜக சீட்டில் போட்டியிட வைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

21 எம்எல்ஏக்களிடம் பேசி இருப்பதாக அவர்கள் கூறினாலும் எங்களுக்குத் தெரிந்தவரையில் இதுவரை 7 எம்எல்ஏக்களுடன் பேசி உள்ளனர். அதற்கு அவர்கள் அனைவரும் மறுத்து விட்டனர்.

இதற்கு என்ன அர்த்தம், நான் மதுபான ஊழல் வழக்கை விசாரிக்க கைது செய்யப்படவில்லை. ஆட்சியை கவிழ்க்க அவர்கள் சதி செய்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் பல முறை சதி செய்துள்ளனர். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. கடவுளும் மக்களும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்எல்ஏக்கள் பலமாக ஒன்றிணைந்துள்ளனர். அதனால் இந்தமுறையும் மக்கள் அவர்களது முயற்சியைத் தோல்வியடையச் செய்வார்கள்.

டெல்லி மக்களுக்காக ஆம் ஆத்மி எவ்வளவு செய்துள்ளது என பாஜகவிற்கு தெரியும். பாஜக உருவாக்கிய அத்தனை தடைகளையும் மீறி டெல்லியில் ஆம் ஆத்மி சாதித்துள்ளது.

டெல்லி மக்கள் ஆம் ஆத்மியை அபரிமிதமாக நேசிக்கின்றனர். அதனால் தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது எனக்கருதி போலியாக மதுபான ஊழலைக் காரணம் காட்டி கைது செய்து ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஆட்குறைப்பில் தீவிரம் காட்டும் பிளிப்கார்ட், ஸ்விக்கி… காரணம் என்ன?

இந்துக்கள் மோடியிடம் விழிப்பாக இருங்கள்: திருமா ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share