டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியை உடைக்க, டெல்லி காய்ச்சும் கள்ளச்சாராயம்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவுக்கு எழுதிய 4 பக்க கடிதம் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தமிழ்நாட்டு எல்லையை கடந்து இன்று தேசிய அளவில் விவாதிக்கப்படும் பொருளாக ,மாறிவிட்டது.

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாலும், அதிகாரிகள், திமுக அரசியல்வாதிகள் ஆகியோரின் அலட்சியத்தாலும்தான் இது நடந்திருக்கிறது என்று சொல்லி, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுகவும் இதே கோரிக்கையை முன் வைத்தது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரும் இதே கோரிக்கையை முன் வைத்தனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் முருகன் ஆகியோர் டெல்லியில் இருந்தபடியே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பேசினார்கள்,

இன்று (ஜூன் 24) தமிழ்நாடு ஆளுநர் ரவியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இப்படி தமிழ்நாடு அளவில் அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அளவில் எழுப்பப்பட்டு வந்த இந்த கள்ளக்குறிச்சி விவகாரம் அடுத்த கட்டமாக… ஒரு தேசிய கட்சியின் தலைவர், இன்னொரு தேசிய கட்சியின் தலைவருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு போயிருக்கிறது.

ஜூன் 23 ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நான்கு பக்கம் கடிதத்தை எழுதியிருக்கிறார்.

Image

அக்கடிதத்தில், ‘மிகவும் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை பாஜகவின் தேசியத் தலைவர் என்ற தகுதியில் மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக ஒரு பாரதியனாகவும் உங்களுக்கு எழுதுகிறேன்.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில், இதுவரை 56 பேர் உயிரிழந்து, 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கள்ளத்தனமான மது அருந்திய விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாபுரம் கிராமத்தில் ஒரே இடத்தில் வரிசையாக பிணங்கள் எரியும் இறுதிச் சடங்குகளின் கொடூரமான படங்கள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கி விட்டது. கணவன், மகன், தந்தையை இழந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அழும் காட்சிகள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

பா.ஜ., உணர்வு பூர்வமான கட்சியாக இருப்பதால், இந்த துக்க காலத்தில் தமிழக மக்களுக்கு முழு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பது மட்டுமல்லாமல், துயரத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகுந்த ஆதரவை வழங்கி வருகிறது’ என்று கூறியுள்ள நட்டா, தொடர்ந்து…

’கார்கே ஜி… கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, ஒருவேளை ஆளும் திமுக-இந்தியா கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், இன்று 56 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் மதுவிலக்கு திட்டம் பற்றி விரிவாக கூறியிருந்ததை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

கார்கே ஜி, உங்களுக்குத் தெரியும் கருணாபுரத்தில் பெரும்பாலும் பட்டியல் சாதியினர் வசிக்கின்றனர். ​இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, ​​உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மெளனமாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மது அருந்துவதைக் கடுமையாக எதிர்த்த மகாத்மா காந்திஜியின் அடிப்படைத் தத்துவங்களுக்கு எதிராகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் அல்லது மதுபான ஊழல்களை ஆதரிப்பதில் ஈடுபடும் இத்தகைய கூறுகளிலிருந்து உங்கள் கூட்டணியை நீங்கள் அகற்ற வேண்டும். இறுதியாக, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்பாக திமுக அரசின் ஆதரவு பெற்ற இந்த பேரழிவுக்கு எதிராக கருப்பு பேண்ட் அணிந்து போராடப் போகிறோம். நீங்களும் வர வேண்டும்’ என்று கார்கேவை அழைத்திருக்கிறார் நட்டா.

அதாவது மதுவிலக்கு என்ற அடிப்படையிலும் தலித்துகள் கொலை என்ற அடிப்படையிலும், சட்ட விரோத மது மாஃபியா என்ற அடிப்படையிலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பதுதான் இந்த நட்டாவின் நான்கு பக்க கடிதத்தின் சாராம்சம்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை மாநில தலைவராக வந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்ற நோக்கத்தில் பேசி வருகிறார். அவர் மாநிலத் தலைவரான முதல் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலேயே, ‘காங்கிரஸ் திமுகவின் தொங்கு சதையல்ல’ என்று பேசினார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில், ‘யாருடைய தயவும் இல்லாமல் காங்கிரஸ் சொந்த பலத்தில் நிற்பது எப்போது? நாம் காமராஜர் ஆட்சி அமைப்பது எப்போது?’ என்றெல்லாம் பேசினார்.

இப்படிப்பட்ட நிலையில் இது கார்கேவுக்கு நட்டா எழுதிய கடிதமாக இருந்தாலும்… இதன் மெசேஜ் திமுகவுக்கும்தான் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தில்.

அதாவது, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில், புதுச்சேரியில் என பத்து இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் மட்டும் இல்லையென்றால் காங்கிரஸ் இவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றிருக்காது. தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்துள்ள நிலையில்… காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று திமுகவுக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாகத்தான்.,.. கார்கேவுக்கு இப்படி கடிதம் எழுதியிருக்கிறார் நட்டா’ என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 59 ஆனது!

தெற்கு- வடக்கு… சூப்பர் ஸ்டார்களை இயக்கும் அட்லி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share