நாடாளுமன்ற முடக்கம்: பாஜக எம்.பி-க்கள் ஆலோசனை!

Published On:

| By Selvam

bjp mps meeting

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ள நிலையில் பாஜக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.

இந்தநிலையில் நேற்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நான்காவது நாளான இன்று (ஜூலை 25) நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி எம்.பிக்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தசூழலில், காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய், திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

செல்வம்

“சிறையில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படவில்லை” – ரகுபதி

அடுத்த மூன்று மணி நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share