உத்தரகாண்ட் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யாவின் கணவர் பீகார் பெண்கள் ரூ. 20,000க்கு கிடைப்பார்கள் என பேசியது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா. இவரது கணவர் கிர்தாரி லால் சாஹு இவரும் பாஜகவில் செயல்பட்டு வருகிறார்.
இவர் அல்மோரா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைராலாகி வருகிறது. அதில் நிகழ்ச்சியில் இளைஞர்களிடம் பேசிய கிர்தாரி லால் சாஹு, ” உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்தில் திருமணம் செய்து கொள்வீர்களா? திருமணம் செய்ய முடியவில்லையென்றால், பீகாரில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து தருகிறோம். அங்கு 20,000 முதல் 25,000 ரூபாய்க்கு கிடைத்துவிடும். நம்முடன் வாருங்கள், உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம்” என்று பேசி உள்ளார்.
கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை காட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் பாஜகவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் ஒன்றும் சந்தையில் கிடைக்கும் பொருள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு ஏற்றபட்ட அவமானம் என பீகார் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநில மகளிர் ஆணையம் கிரிதாரி லாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் மனைவி பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போதே இத்தனை கீழ்த்தரமாக கிரிதாரி லால் பேசி இருப்பது அவரது புத்தியின் வறுமையை காட்டுவதாக பீகார் மகளிர் ஆணைய தலைவி அஸ்பரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் தெரிவித்துள்ளார்.
