கோவை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (நவம்பர் 25) காலை பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் டி.பி.ஆர் வேண்டும் என்றே அறிக்கையை சரி வர தயார் செய்யாததை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை கண்டித்தும், போதைப்பொருள் நடமாட்டம், கல்லூரி மாணவர்கள் இடையே அதிகரித்துள்ளதை கண்டித்தும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Go Back Stalin என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 73 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணி துணை தலைவர் கிருஷ்ண பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்தாக காரணமாக இருந்து விட்டு முதல்வர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். ஏற்கனவே மத்திய அரசின் இண்டர் நேஷனல் ஏர்போட் விரிவாக்கப்படாமலேயே உள்ளது. செக்கு இழுத்து சுதந்திர போராட்டம் நடந்த சிறைச்சாலையில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரை மறைக்க வேண்டும் என்பதற்காக செம்மொழி பூங்காவை அமைத்துள்ளனர். கோவையின் வளர்ச்சியை தவிர்த்து விட்டு தேவை இல்லாத இந்த பூங்காக்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சென்ற வாரம் கோவை வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி, உருவ மொம்மை எரிப்பதற்கு இந்த அரசும், காவல்துறையும் அனுமதி கொடுத்தது. ஆனால் இன்று கருப்பு கொடி ஏந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இன்னும் 6 மாத காலம் தான். அதன் பின் வரும் ஆட்சி மாற்றம் கோவையில் இருந்து தொடங்கி உள்ளது. இனி ஸ்டாலின் எந்த ஊருக்கு சென்றாலும் கருப்பு கொடி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.
