ADVERTISEMENT

அண்ணாமலை வீட்டு முன் கொடிக்கம்பம்… ஜேசிபியை அடித்து நொறுக்கிய பாஜகவினர் கைது!

Published On:

| By Monisha

flag pole in annamalai home

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதில் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு முன் இன்று (அக்டோபர் 21) கொடி ஏற்றுவதற்காக சுமார் 50 அடி உயரமுள்ள கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த பாஜகவினர் அண்ணாமலை வீட்டின் எதிரே கூடினர். இரு தரப்பும் மாறி மாறி வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் இரவு முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அப்போது நிகழ்விடத்திற்கு வந்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் போலீசாரிடமும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து கொடி கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர். இதை கண்டதும் பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்ற விடாமல் ஜேசிபி வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஜேசிபியின் கண்ணாடிகள் உடைந்தது.

மேலும் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் நிலவியது. கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர். இதனால் அண்ணாமலை வீட்டின் முன் திரண்டிருந்த பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தொடர்ந்து கொடிக்கம்பத்தை அகற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் கொண்டு சென்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தொடர்ந்து விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share