ADVERTISEMENT

”டெல்லி அணியின் எந்த காவித் திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது : ஸ்டாலின் உறுதி!

Published On:

| By christopher

bjp magic never workout in tamilnadu - mkstalin

”தமிழ்நாடு ஓரணியில் நிற்கிறபோது டெல்லி அணியின் எந்த காவித் திட்டமும் இங்கே பலிக்காது” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். bjp magic never workout in tamilnadu – mkstalin

கடலூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று காலையில் (ஜூலை 15) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து சிதம்பரம் அருகே லால்புரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் திருவுருவ சிலை மற்றும் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “பெரியாரிய வழியில் வந்த திராவிட இயக்க தலைவர்கள், மார்க்கசிய சிந்தனையில் வந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள், காந்திய வழியில் வந்த தேசிய இயக்க தலைவர்கள், அம்பேத்கரிய இயக்கத் தலைவர்கள் என அனைவரும் ஓரணியில் நிற்கிறோம். இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. அதை தான் திருமாவளவன் கூறினார். அதை நான் வழிமொழிகிறேன். நாம் ஓரணியில் நிற்கிற போது டெல்லி அணியின் எந்த காவித் திட்டமும் இங்கே பலிக்காது.

ADVERTISEMENT

பட்டியலின மக்களுக்கான உரிமைகளின் வாசலை திறந்தவர் ஐயா இளையபெருமாள். மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர். பட்டியல் செருப்பு அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து குரல் கொடுத்தார். அவரது போராட்டங்கள் ஆதி திராவிடர் மக்களிடையே எழுச்சிப் பெற செய்தது. சுதந்திர இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தலில் தன்னுடைய 27வது வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டெல்லியில் எம்.பியாக பதவியேற்றபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களை கூறியதை கேட்டு அம்பத்கரே ஆச்சரியப்பட்டு போனார். இளைய பெருமாளுக்கும், கலைஞருக்கும் பெரிய நட்பு இருந்தது. சமூக நீதிக்காக உழைத்த அவருக்கு திராவிட மாடல் அரசு செய்யும் நன்றிக்கடன் தான் இந்த விழா.

திமுக ஆட்சியில் தான் பழங்குடியின மக்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூக விடுதலைப் பயணம் என்பது நீண்ட நெடியது. அதற்கு காலம் பிடிக்கும். ஆனால் எல்லாம் மாறும். நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாற்றுவேன். அதற்காக திராவிட மாடல் அரசு சமூக விடுதலையில் தன்னுடைய பங்களிப்பை எப்போதும் உறுதியாக செலுத்தும்” என ஸ்டாலின் பேசினார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், விஷ்ணு பிரசாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share