மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நாளை தமிழ்நாடு வந்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
சிதம்பரம், கரூர், விருதுநகரில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
“நாளை காலை 11 மணியளவில் சிதம்பரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜே.பி.நட்டா, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினியை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதைதொடர்ந்து கரூர் செல்லும் அவர் மதியம் 1.15 மணியளவில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கிருந்து விருதுநகர் செல்லும் அவர் ராதிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அங்கிருந்து திருச்சி சென்று ரோடுஷோவில் ஈடுபடவுள்ளார்” என பாஜக தலைமை தெரிவித்திருந்தது.
இதற்காக, திருச்சியில் காந்தி மார்க்கெட் முதல் மலைகோட்டை வரை ரோடுஷோ நடத்த திட்டமிட்டு பாஜக திருச்சி காவல்துறையிடம் அனுமதி கோரியது. ஆனால் சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி அனுமதி மறுப்பதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாற்று பாதையை தேர்ந்தெடுக்குமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணைய உத்தரவுபடி சுவிதா ஆப்பில் வாகன பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதாகவும், 40 மணி நேரம் கடந்தும் போலீசார் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனவும் திருச்சி பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
காந்தில் மார்க்கெட்டில் இருந்து பெரிய கடை வீதி வழியாக மலைக்கோட்டை வரை ரோடுஷோ நடத்த அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அலுவலகத்தில் பாஜகவினர் காத்திருக்கின்றனர். அனுமதி வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் காவல் ஆணையர் ஆலோசித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெங்களூரு:120 அடி தேர் கவிழ்ந்து விபத்து
“வேட்பாளர்களை தேடும் நிலையில் காங்கிரஸ்” : மோடி தாக்கு