பாஜக ஓபிசி அணி செயலாளர் கைது – கட்சியில் இருந்து நீக்கம் : பின்னணி என்ன?

Published On:

| By vanangamudi

bjp kr vengatesh arrested what is background

பாஜக ஓபிசி அணி செயலாளராக இருந்த கே.ஆர்.வெங்கடேஷ், சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் இன்று (ஜூன் 14) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். bjp kr vengatesh arrested what is background

சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மிளகாய்ப்பொடி வெங்கடேஷ் என்கிற கே.ஆர்.வெங்கடேஷ்.

பிரபல ரவுடியான இவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தல், அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து என வழக்குகள் உள்ளன.

ஆந்திராவில் மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை ஆவடி மாநகர காவல் துறையில் 10 வழக்குகள் உள்ளன. மொத்தமாக இவர் மீது, 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இப்படி பிரபல குற்றவாளியாக இருக்கும் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார் , இவர் பாஜகவில் சேர்ந்த உடனேயே தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிசி பிரிவில் மாநில செயலாளர் பதவியும் பெற்றுக்கொண்டார்

இந்த நிலையில்தான் கடந்த 7ஆம் தேதி 2 நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் விருப்பப்ம் தெரிவித்திருந்த நிலையில் மாநில செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அமித்ஷாவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் ஆதரவோடு அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் மிளகாய்ப்பொடி வெங்கடேசனும் இடம்பெற்றார்.

அந்த நிகழ்வில் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் இந்த நிகழ்வு நடந்து முடிந்த நிலையில் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் அமித்ஷாவை வரவேற்று பொன்னாடை போர்த்திய புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதில் ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என தென் மாநில காவல்துறையினரை டேக் செய்திருந்தார். அதோடு, பிரதமர் மோடி , அமித்ஷா , ,அண்ணாமலை , நயினார் நாகேந்திரன் , கே.டி ராகவன், சவுக்கு சங்கர், இவ்வளவு ஏன் அறிவாலயம் வரை அனைவரையும் டேக் செய்திருந்தார்.

இந்த புகைப்படம் டேக் செய்யப்பட்டது 3 மாநில காவல்துறைக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது

அமித்ஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பார்த்து என்ன நடவடிக்கை எடுப்பது என தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில்தான் இதுபற்றிய தகவல்கள் மத்திய உளவுத்துறை மூலமாக அமித்ஷா காதுகளுக்கு செல்ல, இது குறித்து உடனடியாக அமித்ஷா நயினர் நாகேந்திரனிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன், அமித்ஷாவை வரவேற்க வெங்கடேசனை ஏற்பாடு செய்த நபரையும் அழைத்து விசாரித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் தொழிலதிபர்களை மிரட்டி பண மோசடி செய்த வழக்கில் மிளகாய் பொடி வெங்கடேசனை நேற்று (ஜூன் 13) சென்னை செங்குன்றம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தசூழலில் தான், பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கே ஆர் வெங்கடேஷை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நீக்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share