மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.
அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கண்டன தீர்மானம் நிறைவேற்றியதை பாஜக கண்டிப்பதாக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கரு நாகராஜன்,
“பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ போன்றோர் தரக்குறையாவாக பேசி களங்கம் சுமத்த முயன்றிருக்கிறார்கள்.
தமிழகத்தின் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவராக அண்ணாமலை உருவாகியிருக்கிறார். அவரை பற்றி பேச அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதி இல்லை.
அண்ணாமலை என்பவர் தனி நபர் அல்ல. அவர் தனித்திட்டங்களோடு செயல்படவில்லை. அவருடைய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு உள்நோக்கத்தோடு பேசுவதை தமிழக மக்கள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவினர் அண்ணாமலையை விமர்சனம் செய்யும் போக்கை நிறுத்த வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பதிலாக அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது என்றைக்கும் பிரதமர் மோடி உள்பட அனைவரும் மரியாதை வைத்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதிமுகவினருக்கு பிரச்சனைகள் இருந்தால் டெல்லி தலைமையிடம் பேசியிருக்கலாம். அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றியதை நாங்கள் கண்டிக்கிறோம். அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றதற்கு பாஜக உதவியது. நாடாளுமன்ற கூட்டணி குறித்து அகில இந்திய பாஜக தலைமை தான் முடிவெடுக்கும்.
திமுகவிற்கான வாய்ப்பை அதிமுக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து அதிமுகவினர் அரசியல் செய்கின்றனர். அண்ணாமலை ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார். பாஜக ஊழலுக்கு எதிரான கட்சியாகும்” என்று கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
வானதி அலுவலகத்துக்குள் புகுந்த நபர் மரணம்: நடந்தது என்ன?
”தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக” – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
