ஊழலில் ஊறிய கட்சி பாஜகதான் : மும்பையில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

பாஜக ஊழலில் ஊறிய கட்சி என்றும் அந்த கட்சியை  அகற்றியாக வேண்டும் என்றும் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று (17-04-2024), மும்பையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்ரே, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்,  திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எனது சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்! இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

ராகுல் காந்தி எங்குச் சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள்.

ADVERTISEMENT

இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.

இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது.
அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது.

8,000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம்சாட்டுகிறார்.

நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக இல்லை. இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தேர்தல் பத்திர நிதி: அதிமுகவுக்கு ரூ.5 கோடி கொடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம்!

எலெக்‌ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share