நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் ‘ராஜ்பவன்’ என அழைக்கப்படுவதற்கு பதிலாக ‘லோக் பவன்’ (மக்கள் மாளிகை) என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” என கூறியிருந்தார்.
ஆனால் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில், “ “ராஜ் பவன்” என்பதை “மக்கள் பவன்” என அழைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அதை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்த…
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், ஆன்மீகத்தின் மீதும் தீவிர பற்று கொண்டவரும், எளிமையின் இலக்கணமாகவும், தூய்மையின் அடையாளமாகவும் விளங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்களின் அன்பை பெற்ற “மக்கள் ஆளுநர்” என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்..!!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த பதிவை முன்வைத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
