ஆப்பிரிக்க பயிற்சியாளரும் இந்தி கற்க வேண்டும் என மிரட்டிய பாஜக கவுன்சிலர்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கிழக்கு டெல்லியின் மயூர் விஹாரில் ஒரு ஆப்பிரிக்க நாட்டு கால்பந்து பயிற்சியாளரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நகராட்சி பூங்காவில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று மிரட்டிய பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கவுன்சிலர் ரேணு சவுத்ரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.

இந்தியாவில் விடுதலைக்கு பின்னர் மொழி மற்றும் பண்பாடு அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்நிலையில் அவ்வப்போது இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டு பயிற்சியாளரையும் இந்தியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக கவுன்சிலர் ஒருவர் மிரட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கிழக்கு டெல்லியின் பத்ரபர்கஞ்ச் பகுதியில் மயூர் விஹார் ஃபேஸ் 1ல் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளாகவே அவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஆப்பிரிக்க பயிற்சியாளர் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என பத்ரபர்கஞ்ச் கவுன்சிலர் ரேணு சவுத்ரி மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் கால்பந்து பயிற்சியாளரை பார்த்து ரேணு சவுத்ரி,”நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தி கற்கா விட்டால் பூங்காவிற்குள் நீங்கள் வரவே கூடாது. இந்த நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கீறீர்கள்.. பிறகு ஏன் நீங்கள் உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த சிலர் சிரிக்க தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த ரேணு, இது சிரிப்பதற்கான விஷயம் இல்லை. நான் தீவிரமாக இருக்கிறேன். 8 மாதங்களுக்கு முன்பே இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தேன். இந்த நாட்டில் பணம் சம்பாதிப்பவர் இந்த நாட்டின் மொழியை கற்க வேண்டும். அப்போது நான் அவரை கண்டித்த நிலையில் உள்ளூர் மக்கள் தான் எதுவும் செய்ய வேண்டாம் என்றனர். அப்போது குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதால் எதுவும் செய்ய வேண்டாம் என்றனர். நான் விட்டு விட்டேன். ஆனால் இந்த முறையும் அப்படிச் செய்ய முடியாது என்றார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கால்பந்து பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், பாஜகவைச் சேர்ந்த ரேணு சவுத்ரி வெளியிட்ட செய்தியில், யாரையும் காயப்படுத்துவதோ, அல்லது புண்படுத்துவதோ எனது நோக்கம் இல்லை. எம்சிடி பூங்கா குழந்தைகள் விளையாடுவதற்கும் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் மட்டுமே. யாருக்காவது சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது எந்த விதத்திலும் காயம் ஏற்பட்டிருந்தாலோ, நான் எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் எப்போதும் போல பூங்காவில் சுதந்திரமாக விளையாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

பயிற்சியாளருக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் இடையே தகவல்தொடர்பை எளிதாக்குவதே எனது நோக்கம் என்றும் விளக்கமளித்தார். மேலும் பூங்காவை நிர்வகிக்கும் டெல்லி மாநகராட்சியின் ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் புரியாது. இதன் காரணமாகவே இந்தி கற்க சொல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share