மேற்கு வங்கத்தில் பாஜக பந்த்: ஹெல்மெட்டுடன் பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!

Published On:

| By Kavi

கொல்கத்தாவில் மாணவர் பேரணியில் போலீசாரின் தாக்குதலை கண்டித்து இன்று (ஆகஸ்ட் 28) 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

எனினும் மருத்துவ மாணவர்கள், பலியான பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் தடையை மீறி மாணவர்கள் செல்ல முயன்றதால் அவர்கள் மீது தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் வெளியேற்றினர்.

மேற்குவங்க மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த மாநில பாஜகவினர் இன்று காலை 6 மணி முதல் 12 மணி நேரம் பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் முக்கியமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவித்தபடி இன்று காலை ஆறு மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருசில இடங்களில் வழக்கம் போலவே காணப்பட்டது.

சில இடங்களில் வெளியே நடமாடும் பொது மக்களை வீட்டுக்கு செல்லுமாறு பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஹவுரா உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்துகளை ஓட்டுகின்றனர். பாதுகாப்புக்காக போக்குவரத்து துறையே ஹெல்மெட் வழங்கியதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்

அலிபுருதூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த பந்த் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் குனால் கோஷ், “பந்த் அழைப்பு மூலம் பாஜகவே நேற்றைய பேரணி, வன்முறையின் பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்து மக்கள் பந்த்தை புறக்கணிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி தொடங்கப்பட்ட தினம். இந்த தினத்தை நான் எங்கள் சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். மன்னிக்கவும்” என்று பெங்காலியில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

லண்டன் புறப்பட்ட அண்ணாமலை

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share