மிஸ்டு கால் கேட்கும் பாஜக: மாணவர்களிடம் ஐடி கார்டு கேட்கும் திமுக!

Published On:

| By Selvam

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராக தொடங்கிவிட்டன. அதன் முக்கிய பணியாக பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கையை புதுப்பித்தனர். முதல் ஆளாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர்.

பழைய உறுப்பினர்களைத் தவிர புதிய உறுப்பினர்களையும் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மண்டல வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 200 பேரை சேர்க்க வேண்டும் என்று பாஜக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கு ‘8800002024’ என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். பின்னர், அந்த நம்பருக்கு வரும் லிங்க்கில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து பாஜகஉறுப்பினராக சேரலாம்.

இந்நிலையில், பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.

ஆனால், இவ்வாறு பாஜகவினர் செல்லும் போது, பொதுமக்கள் மிஸ்டு கால் கொடுக்க தயங்குகின்றனர். சமீப காலமாக செல்போன் எண்களை வைத்து பணம் பறிப்பு போன்ற சைபர் குற்றங்கள் நடந்து வருவதால் தங்களது செல்போன் எண்களை கொடுக்க தயங்குகின்றனர்.

பெரும்பாலும் கிராமங்களிலும், அரசு ஊழியர்களும் மிஸ்டு கால் கொடுப்பதில்லை என்கிறார்கள் பாஜகவினரே.
இன்னொரு பக்கம் திமுகவினரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்து திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் ஈடுபடுகின்றனர்.

இதில் உள்ளூர் திமுகவினர், படிக்கும் இளைஞர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது ஐடி கார்டு, வோட்டர் ஐடி நகலை கேட்கிறார்கள். அப்போதுதான் உங்களுக்கு அரசு பணி கிடைக்கும் என்று கூறி அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு அதன் மூலம் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள்.

ஆனால், சில மாணவர்கள் தங்களது, ஐடி, வோட்டர் கார்டை கொடுக்க மறுக்கிறார்கள். இப்படி கடலூரில் கோண்டூர், பணங்காடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் தமிழகம் முழுவதும் பாஜகவினரும், திமுகவினரும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடுவது குறித்து நம்மிடம் பேசிய கடலூர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருண்மொழி தேவன் கூறுகையில், “அரசு வேலை தருகிறோம் என்று கூறி மாணவர்களிடத்தில் ஐடி கார்டு வாங்கிச் செல்வதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம். அரசு வேலை என்று மாணவர்களை குழப்பி அவர்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பது சரியா? பாஜகவினர் வீடு வீடாக சென்று மிஸ்டு கால் கொடுங்கள் உறுப்பினராக சேருங்கள் வங்கியில் லோன் வாங்கி கொடுக்கிறோம் என்று மக்களை ஏமாற்றுவது வேதனையாக இருக்கிறது” என்றார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடரும் ரயில் விபத்துகள்: சிஏஜி அறிக்கையில் பகீர்… இனியாவது விழிக்குமா மத்திய அரசு?

60 ஆயிரமாக சுருங்கிய பார்சி மக்கள்… சிங்கிளாக வாழ்வதால் உருவான சிக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share