இந்தியா முழுதும் கொரோனா ஊரடங்கு இரண்டு மாதங்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
முதல் ஊரடங்கு தொடங்கிய சில நாட்களிலேயே டெல்லியில் இருந்து ராஜஸ்தான், ஹரியானா, உபி, பஞ்சாப் மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் நடந்து சென்றதும், அவர்களில் பலர் உணவுக்கு வழியின்றி பட்டினி கிடந்ததும் ஊடகங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்தன. சமூக தளங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பல வீடியோ காட்சிகள் வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதாக மாறின. லாரிகளில் ஏறிச் சென்ற தொழிலாளர்கள், ரயில் பாதையில் அடிபட்டு இறந்த தொழிலாளர்கள், கைக் குழந்தைகளோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து சென்று பலியான தொழிலாளர்கள் என்று கடந்த மாதம் முழுதும் வேதனைச் செய்திகளே அதிகம் ஆக்கிரமித்தன.
இந்த நிலையில் பாஜக தலைமை இன்று (மே 20) அனைத்து மாநில பாஜக தலைமைகளுக்கும் ஓர் உத்தரவிட்டுள்ளது. அதில், “கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பாஜக செய்துள்ள உதவிகள், நற்பணிகள் பற்றிய விவரங்களைப் பட்டியலிட்டு இன்னும் ஏழு நாட்களுக்குள் தேசியத் தலைமைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாஜக செய்த உதவிகள் என்ன என்பது பற்றி மாநிலத் தலைமைகள் அறிக்கை அளித்த பின் அதுபற்றி பாஜகவின் அகில இந்திய தலைமை விரிவான அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-வேந்தன்**
