தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் ஒரு போதும் தொட்டுவிட முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொன்னேரியில் இன்று ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு வருவதை நான் எப்போதும் ஒரு பெருமையாகக் கருதுகிறேன். இயல்பாகவே, கடந்த பல ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களுடன் எனக்கு ஒரு நெருக்கமான உறவு உருவாகியுள்ளது.
இதைப் பற்றி நான் நிறைய யோசித்ததுண்டு. என் இதயத்தில் தமிழ்நாடு மக்களுக்காக மட்டுமல்ல, இந்தத் தமிழ் மண்ணிற்காகவும் ஒரு தனி இடம் இருக்கிறது என்று சிந்தித்திருக்கிறேன்.
என்னுடைய குடும்பம் பிறப்பால் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தது. அதனால் நான் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லும் போதெல்லாம், எனது சொந்த வீட்டிற்குச் செல்வது போன்ற உணர்வைப் பெறுவேன். ஸ்ரீநகரில் இறங்கும் போதும், அங்கிருக்கும் மலைகளைப் பார்க்கும் போதும், “ஆஹா, வீட்டிற்கு வந்துவிட்டோம்” என்ற நிம்மதி எனக்குக் கிடைக்கும்.
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, என் குடும்பமும் தமிழ்நாட்டைச் சேர்ந்தது கிடையாது. இருப்பினும், இந்தத் தமிழ் மண்ணோடு நான் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பிஜேபி (BJP) அமைப்புகள் தமிழ்நாட்டைத் தாக்க முயற்சிப்பதைக் காணும்போது, பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் தாக்கும் போதெல்லாம், நான் என்னை ஒரு தமிழனாகவே உணர்கிறேன். ‘இவர்கள் எப்படி தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்த துணிகிறார்கள்?’ என்று என் மனதில் தோன்றும்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வந்தார்கள். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சிப்பதாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் ஏற்கனவே 2023-ல் அந்த மசோதாவை நிறைவேற்றிவிட்டனர்.
நேற்று அந்தப் பெண்கள் மசோதாவிற்குப் பின்னால் ஒளிந்திருந்தது ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) ஆகும். அதன் நோக்கம் என்ன தெரியுமா? இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே ஆகும்.
தென் மாநிலங்களின் வலிமையைக் குறைக்கவும், சிறிய மாநிலங்களின் வலிமையைக் குறைக்கவும், வடகிழக்கு மாநிலங்களின் வலிமையைக் குறைக்கவும் அவர்கள் திட்டமிட்டனர். அந்தத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றத்தில் நாங்கள் தோற்கடித்தோம்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அந்த மசோதாவை நாங்கள் தோற்கடித்தோம். ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றியத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி குரல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும், தனது மொழியைப் பேசவும், தனது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் சுதந்திரம் கொண்டிருக்க வேண்டும். பிரதமர் மோடி, ‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மக்கள்’ என்று சொல்லும் போதெல்லாம், அவர் இந்திய அரசியலமைப்பையே தாக்குகிறார்.
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் என்ன செய்ய முயல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முற்காலத்தில் ராணுவத்தைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. திடீரென ஒரு ராணுவம் வாசலில் வந்து நிற்கும், போர் நடக்கும்.
பாஜகவும் அதையே செய்கிறது, ஆனால் ராணுவம் இல்லாமல். அவர்கள் தமிழ் மொழியைத் தாக்க விரும்புகிறார்கள், தமிழ் வரலாற்றைச் சிதைக்க விரும்புகிறார்கள், தமிழ் கலாச்சாரத்தைத் திருத்த விரும்புகிறார்கள். அதைச் செய்ய நாம் அவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறியாமை மிக்கவர்கள். அவர்கள் தமிழ் மக்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ‘தமிழ்’ என்பதன் பொருள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களை யாராலும் ஒழிக்க முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. இதுதான் உண்மை.
பாஜகவிற்குத் தேவையெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கூட்டாளி; அந்த கூட்டாளி டெல்லியில் இருந்துகொண்டு அவர்கள் தமிழ்நாட்டை ஆளுவதற்கு அனுமதிக்க வேண்டும். அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியிடமிருந்து உத்தரவுகளைப் பெறும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் எவ்வாறு நரேந்திர மோடியைத் தன் வசப்படுத்தினாரோ (compromised), அதேபோல தமிழ்நாட்டை ஆளுவதற்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஒரு முதலமைச்சரை அவர்கள் விரும்புகிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அடிப்படைத் தன்மையிலேயே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.
தேசிய நாடாளுமன்றத்தில் உங்கள் குரலின் வலிமையைக் குறைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த முழுத் திட்டத்தையும் நேற்று நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இந்தத் தேர்தலில், திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள எனது சகோதரர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டாளியான அதிமுகவின் தாக்குதலிலிருந்து தமிழ் மொழியைப் பாதுகாக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம்: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஒருபோதும் தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தைத் தொட முடியாது.
இப்போது, உங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழி குறித்து நான் கூறினேன். இப்போது நீங்கள் இந்தியாவிற்குச் செய்த பங்களிப்புகளைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
- முற்போக்கான வளர்ச்சிக்கான பாதையை நீங்கள் இந்தியாவிற்கு காட்டியுள்ளீர்கள்.
- சமூக நீதி என்றால் உண்மையில் என்ன என்பதையும்
- பெண்கள் பாதுகாப்பு என்பதன் உண்மையான அர்த்தத்தையும் நீங்கள் இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளீர்கள். அதற்காக நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டில் சமூக நீதியை மேலும் ஆழப்படுத்த இந்தத் தேர்தலில் 6 முக்கிய வாக்குறுதிகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
- தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் பெண்களுக்கு உதவுவதே எங்களின் முதல் வாக்குறுதி.
- ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் நேரடியாக 2,000 ரூபாய் செலுத்தப்படும்.
- அதேபோல, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் 2,000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
- தமிழகத்தின் வருங்கால சந்ததியினரின் கல்விக்காக, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- உணவுப் பாதுகாப்பிற்காக, குடும்பங்களுக்கு ஆதரவாக மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, அனைத்து அரசு காலிப்பணியிடங்களும் 300 நாட்களுக்குள் நிரப்பப்படும்.
- மேலும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் உள்ளூர்மக்களுக்கு 60% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- இறுதியாக, பெண்களுக்கு முதன்முறையாக சொத்து பதிவு செய்யும் போது பத்திர பதிவுக் கட்டணம் முற்றிலும் நீக்கப்படும்.
சகோதர சகோதரிகளே, இந்தத் தேர்தலின் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பாரதிய ஜனதா கட்சியை (BJP) தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது. தமிழ் மொழி, வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்-மிடமிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தமிழ்நாடு டெல்லியிலிருந்து ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள். தமிழக முதலமைச்சர் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தான் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இந்த மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவிலுள்ள மற்ற மொழிகளைப் போலவே தமிழ் மொழியும் எக்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மொழி என்பது சாதாரணமானது அல்ல; அது உங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால அனுபவம் மற்றும் நினைவுகளின் தொகுப்பு. இது வெறும் பேச்சல்ல, இது முழு தமிழ்நாட்டின் அடையாளம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசிய மொழி இது.
ஒவ்வொரு முறையும் மோடி இங்கு வந்து தமிழ்நாட்டைப் பற்றிப் பேசும் போதெல்லாம், தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: அவர் தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆளவே விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
நாங்களும் ஏற்கனவே பல மாநிலங்களை டெல்லியிலிருந்து இதுபோன்று ஆட்சி செய்திருக்கிறோம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, எங்களுடைய கூட்டணிக் கட்சிகளை (Partners) எப்போதும் சமமாகத்தான் நாங்கள் பாவித்திருக்கிறோம். எங்களுடைய கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவதற்கோ, உருட்டுவதற்கோ அல்லது அவர்களை எங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்கோ நாங்கள் எந்த ஒரு புலனாய்வு அமைப்புகளையும் (Intelligence Agencies) எப்போதும் பயன்படுத்தியது இல்லை.
பாஜக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (AIADMK) முற்றிலுமாக அழித்துவிட்டது. சொல்லப்போனால், இப்போது அதிமுக என்ற ஒன்றே தமிழ்நாட்டில் இல்லை. அது நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது இருப்பது வெறும் ஒரு கூடு (Hollow shell) மட்டும்தான்.
திமுக-வைப் போலவே, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியாக அதிமுக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று அதிமுக என்ற ஒன்று இல்லை. இப்போது இருக்கக்கூடிய அதிமுக என்பது வெறும் முகமூடிதான். பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகத்தை மறைத்திருக்கும் ஒரு முகமூடிதான் இந்த அதிமுக.
எனவே, நீங்கள் அதிமுக கட்சியினரையோ, அவர்களுடைய தலைவர்களையோ அல்லது அவர்களுடைய கொடிகளையோ பார்க்கும்போது ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: அவர்கள் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். தங்களின் ஊழல் காரணமாக அவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களை வைத்துத் தமிழ் மொழி, தமிழ் வரலாறு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை முழுமையாக அழிக்க நினைக்கிறது பாஜக.
தயவுகூர்ந்து இந்தியா கூட்டணிக்கு (INDIA Alliance), காங்கிரஸ் கட்சிக்கு, திமுக-விற்கு மற்றும் இக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு உங்கள் பேராதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பாஜக-வால் நடத்தப்படும் இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை நசுக்கப் பார்க்கிறார்கள்; உங்கள் வளர்ச்சி மாதிரியை (Model of development) அழிக்கப் பார்க்கிறார்கள்; சமூக நீதிக் கொள்கைகளை (Social justice) இல்லாமலாக்கப் பார்க்கிறார்கள். இரண்டு மூன்று நிறுவனங்களைத் தவிர வேறு யாரும் இங்கு இருக்கக் கூடாது என்ற புதிய இந்தியாவை அவர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்.
இது முதன்மையாக ஒரு கொள்கைக்கான போர் (Ideological battle), அதற்குப் பிறகுதான் இது ஒரு அரசியல் போர். இது கட்டாயப்படுத்துதலுக்கும் (Coercion) ஒருமித்த கருத்திற்கும் (Consensus) இடையேயான போர்.
இங்கு வந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எங்கு இருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு தனி விருப்பமும், தனி உறவும் உண்டு என்பதை உங்களுக்கு உறுதிபடக் கூறுகிறேன். அவர் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழருக்கும் தெரியும் – ராகுல் காந்தி எப்போதும் தமிழ் மொழி, தமிழ் வரலாறு மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பார் மற்றும் தமிழ் மக்களின் ஒரு கூட்டாளியாகத் திகழ்வார் என்பது.
மிக்க நன்றி. எங்களது வேட்பாளர்களையும், காங்கிரஸ் தொண்டர்களையும் ஆதரியுங்கள். திமுக மற்றும் எங்களது கூட்டணியில் உள்ள இதர கட்சிகளையும் ஆதரியுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், “இந்த மண் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர், அண்ணா போன்ற பெரிய தலைவர்கள், மரியாதைக்குரிய கலைஞர் போன்ற தலைவர்கள், அவர்களுக்குப் பின்னால் இப்போது மரியாதைக்குரிய நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு எழுச்சியை நோக்கிய ஆட்சிப் பயணத்தில் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்று, மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்று, மிகப்பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் அனைவரும் நம்முடைய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்றார்.
