2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ‘கூட்டணிப் பேச்சுவார்த்தை’ நடத்தி கொண்டிருக்கிறது.. சில வாரங்களில் முடிவை தெரிவிப்போம் என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று டிசம்பர் 27-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ”வருகின்ற தேர்தலில் எங்களது கூட்டணி அதாவது ஒரு சில வாரங்களில் நாங்கள் மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.. நல்ல ஒரு பெரிய கூட்டணி.. மக்கள் விரும்புகிற கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.. எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும்.. திமுக ஆட்சியை அகற்றி எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து
- பாமக தலைமையில் கூட்டணி அமையுமா? அல்லது நீங்கள் யாருடனாவது கூட்டணி சேருவீர்களா?
- பாமக தலைமையில் கூட்டணி உருவாகும்னு எடுத்துக்கலாமா?
- பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துறீங்களா?
- திமுகவை நீங்க தீயசக்தின்னு சொன்ன மாதிரியே தவெகவும் சொல்லுது.. பாமகவும் தவெகவும் கூட்டணி அமைக்குமா?
- பாஜக- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட் ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே?
- கூட்டணி தொடர்பாக யாரெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?
- டெல்லியில் இருந்து உங்ககிட்ட கூட்டணி பற்றி பேசுனாங்களா?
- கூட்டணி ஆட்சியை பாமக வலியுறுத்துகிறதா?
- பாஜகவுடன் கூட்டணி சேரப் போகிறீர்களா?
என செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும், “பேச்சுவார்த்தை நடக்கிறது.. இப்ப எதுவும் சொல்லமாட்டோம்.. 2 வாரங்களில் சொல்கிறோம்” என்ற பதிலையே திரும்ப திரும்ப கூறினார் அன்புமணி.
