ஒரே குடும்பமாக தேர்தலை எதிர்கொள்வோம் : ஈபிஎஸ் பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!

Published On:

| By Kavi

2026 தேர்தலில் பாஜக – அதிமுக இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணி ஒரே குடும்பமாக தேர்தலை எதிர்கொள்ளும் என்று பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று (டிசம்பர் 23) சென்னை வந்தார்.

ADVERTISEMENT

காலையில் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில்   நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணிகள்  குறித்து  ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்தார்.

ADVERTISEMENT

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக்கு பின் பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது பியூஸ் கோயல் கூறுகையில், “என்னுடைய அருமை சகோதரர், நண்பர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது மகிழ்ச்சி. அவரது தலைமையில் தமிழகத்தில் தேர்தலை சந்திப்போம். இன்றைய கூட்டம் சிறப்பாக நடந்தது. அரசியல் வேலைகளை வேகப்படுத்துவது, 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனையும் சிறப்பாக நடந்தது. பிரதமர் மோடியின் தலைமையிலான என்.டி.ஏ குடும்பம், 2026 தேர்தலில் அமோக வெற்றி பெறும். நாங்கள் அடுத்த சிலமாதங்களுக்கான பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை ஊழல் கட்சியான திமுகவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல அரசாங்கம் வரவேண்டும். அந்த அரசாங்கம் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு மக்களுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், சிறு குறு நிறுவனங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை கொடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நீண்ட இடைவெளிக்கு பிறகு பியூஸ் கோயலை இன்று சந்தித்து பேசினோம். தமிழக நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை இன்று தொடங்கியுள்ளோம்.

தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். திமுக அகற்றப்பட வேண்டும். அதற்காக அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share