வழக்கமான அவியல் செய்யும் முறைதான் என்றாலும் இந்த பாகற்காய் அவியல், தேங்காய்த்துருவல், தேங்காய் எண்ணெயும் கூட்டணி சேர்க்கும்போது தனித்துவச் சுவை பெறுகிறது. ஆனி, ஆடி மாதங்களில் நாஞ்சில் நாடெங்கும் இந்த அவியலின் மணத்தை அனுபவிக்கலாம்.
**என்ன தேவை?**
பாகற்காய் – 3
சின்ன வெங்காயம் – 15
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**அரைக்க…**
தேங்காய்த் துருவல் – கால் கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4 (தோலுரிக்கவும்)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
பாகற்காயைக் கழுவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி ஓர் அங்குலத் துண்டுகளாக நீளமாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். புளியைச் சூடான நீரில் ஊறவைத்து, பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். கனமான கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பாகற்காயைச் சேர்த்து வதக்கவும். பாகற்காய் வதங்கி நிறம் மாறியதும் புளிக்கரைசலைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வேகவிடவும். புளிக்கரைசலில் சிறிது நேரம் வெந்ததும், உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து ஐந்து நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, உளுந்து சேர்த்து, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சூடான அவியலில் கலந்துகொள்ளவும்.
**[நேற்றைய ரெசிப்பி: புளிக்கறி](https://minnambalam.com/public/2021/11/16/1/tamirind-curry)**
.
