ADVERTISEMENT

துருவ் விக்ரமின் ‘பைசன்’ 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By christopher

bison 5 days box office collection here

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பைசன் – காளமாடன்’ திரைப்படத்தின்

இந்தாண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, துருவ் விக்ரமின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய பெரிய படங்கள் நேருக்கு நேர் மோதின. இதில் டியுட் திரைப்படம் கடந்த 5 நாட்களில் ரூ.95 கோடி வசூல் அள்ளியதாக படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள பைசன் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வசூல் தமிழ் பதிப்பிற்கு மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பைசன்’ நல்ல முன்னுதாரணம்!

இந்த நிலையில் கத்துக்குட்டி, நந்தன் படத்தின் இயக்குநரான இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பைசன் படம் குறித்து உருக்கமாக எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “‘நந்தன் படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன்.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் இரைக்கத் தொடங்கியது. இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார்.

ADVERTISEMENT

மிகப்பெரிய போராட்டக்காரனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது. சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ நல்ல முன்னுதாரணம்.

பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி, “முன்னேறி மேல போங்கப்பா…” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ படம்.

மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள்.

‘பைசன்’ பார்த்த நெகிழ்வில் தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன். அந்தளவுக்குப் பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’! ஒரு படம் இதைவிட வேறென்ன பண்ண வேண்டும்?” என சரவணன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share