நாகையில் ராகுல் காந்தி பிறந்தநாளை ஓடும் ரயிலில் கேக் வெட்டி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
1970 ஜூன் 19ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தார். இன்று அவரது 53ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுலின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் 53 அடி நீளம், 106 கிலோ எடையுள்ள கேக் வெட்டிக் கொண்டாடப்படவுள்ளது.
அதுபோன்று நாகையில் ஓடும் ரயிலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். காரைக்காலிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணிகளுடன் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்த ராஜா,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஏ.ஆர்.நௌசாத் ஆகியோர் கேக் வெட்டி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், நாகை மாவட்ட காங்கிரஸ் குழு துணை தலைவர்கள் காதர் ஜலாலுதீன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ரபீக், நாகூர் நகர காங்கிரஸ் குழு தலைவர் சர்புதீன் மரைக்கான், நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சகாபுதீன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ரயிலில் கேக் வெட்டியதோடு, பொதுமக்களுக்கு இலவச டிக்கெட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கியும் ராகுல் பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்போது, “வருங்கால பிரதமர் ராகுல் காந்தி” எனவும் கோஷம் எழுப்பினர்.
இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரியா
