சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹமாசின் பல தலைவர்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிலர் ஈரான் நாட்டுக்கு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சின்வர் கொல்லப்படுவதற்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுரங்கத்துக்குள் சென்ற வீடியோ ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சின்வரின் மனைவி கையில் வைத்திருந்த பேக்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.
அதாவது, சின்வரின் மனைவி கையில் வைத்திருந்த பேக் Hermes Birkin ரகத்தை சேர்ந்தது என்றும் 32 ஆயிரம் யு.எஸ். டாலர்கள் விலை கொண்டது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் இந்த கை பையின் மதிப்பு மட்டும் 27 லட்சம் ரூபாய் என்று இஸ்ரேல் சொல்கிறது.
இதை காசா மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், அரேபிய மொழியில் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஏவிச்சே அட்ரைய் , சின்வரின் மனைவி கையில் பிர்கின் ரக பேக்கை கையில் வைத்து கொண்டு நடந்து வருவது போன்ற புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, அராபிய மொழியில் சில வரிகளையும் அவர் எழுதியிருந்தார். அந்த வார்த்தைகளின் அர்த்தம் இதுதான். ‘காசாவில் மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கிய ஹமாஸ் தலைவர், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தன் குடும்பத்தினரை மட்டும் சொகுசாக வாழ வைத்துள்ளார். அப்பாவி மக்கள் உணவு கிடைக்காமல் மடிந்து கொண்டிருக்கையில் ஹமாஸ் தலைவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இது சாதாரண பேக்தானே என்று கருதி விட முடியாது. பிர்கின் ரக பேக், ஃபேஷன் உலகில் ரோல்ஸ்ராய்ஸ் கார் போல கருதப்படுவது ஆகும். கடந்த 1837 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஹெர்மஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பேஷன் உலகில் இதுதான் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் பிர்கின் ரக பேக்.
இந்த பேக் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த பிரபல நடிகையும் பாடகியுமான ஜேன் பிர்கின் என்பவர்தான். 1983 ஆம் ஆண்டில், ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜீன் – லூயிஸ் டுமாஸ் பாரிஸிலிருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஜேன் பிர்கின் அருகில் அமர்ந்திருந்தார் . பிர்கின் தனது கைப்பையை விமானத்தில் பொருள்கள் வைக்கப்படும் இடத்தில் வைக்க முற்பட்ட போது, அதில் இருந்த பொருள்கள் கீழே விழுந்தன. அவற்றை எடுக்க பிர்கின் சிரமப்பட்டார்.
அப்போது, அருகிலிருந்த டுமாஸிடம் தனக்குப் பிடித்த வசதியான தோல் பையை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக விளையாட்டாக பிர்கின் கூறினார். இதையடுத்து, 1984 ஆம் ஆண்டு டுமாஸ் பிர்கினுக்காக பிரத்யேகமாக கருப்பு வண்ணத்திலான தோல் பையை உருவாக்கி வழங்கினார். இதுதான் ஹெர்மஸ் பிர்கின் பையாக அறியப்படுகிறது.
சாதாரண மாட்டுத்தோலில் இந்த பைகள் தயாரிக்கப்படுவதில்லை. தீக்கோழி, முதலை தோல்களில் இருந்துதான் இந்த ரக பைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த பையின் ஆரம்ப விலையே 10 ஆயிரம் டாலர்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாய். அதிகபட்சமாக 4 கோடி வரை இந்த ரக பேக்குகளின் விலை உள்ளது. இந்த ரக பேக் செல்வந்தர்களின் அடையாளமாக கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த பேக்கை வாங்குவது கஷ்டமான காரியமாகவே ஆகிப் போனது.
உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தாலும் எவ்வளவு பணம் கொட்டி கிடந்தாலும் உங்களால் பிர்கின் ரக பேக்கை வாங்க முடியாமல் போகலாம். இந்த பேக்கை வாங்குவதற்கே பல ஃபார்மாலிடிகள் உள்ளன. பிர்கின் ரக பேக்கை உடனடியாக நீங்கள் வாங்கி விட முடியாது. அதற்கு முன்னதாக Hermes நிறுவனத்தின் பிற தயாரிப்புகளை நீங்கள் வாங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த பேக் விலை அளவுக்காவது நீங்கள் ஹெர்மஸ் ரக பொருள்களை வாங்கியிருக்க வேண்டும்.
உங்களுக்கும் Hermes நிறுவனத்துக்கும் நல்ல உறவை பேணும் வகையில் உங்கள் அந்தஸ்த்து இருக்க வேண்டும். இந்தியாவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி இரு பிர்கின் ரக கைப் பை வைத்துள்ளார். இந்தியாவில் டெல்லியில் ஒரு ஹெர்மஸ் ஷோருமூம் மும்பையில் இரு ஷோரும்கள் என மொத்த மூன்று மட்டுமே உள்ளன.
ஒரு பிர்கின் பையை உருவாக்க கைவினைஞர்கள் குறைந்தபட்சம் 18 மணிநேரம் எடுத்துக்கொள்கிறார்கள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வடிவமைக்கப்பட்ட இடம் , அதை உருவாக்கிய கைவினைஞரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹெர்மஸ் பிர்கின் பேக்கை வாங்க இவ்வளவு சிக்கல்கள், நடைமுறையில் இருக்கும் போது, ஹமாஸ் தலைவர் சின்வர் மனைவி கையில் எப்படி இந்த பிர்கின் ரக பை வந்தது என்பது சந்தேகமாக உள்ளது.
உண்மையிலேயே இஸ்ரேல் சொல்வது போல, அது பிர்கின் ரக பேக்தானா? அல்லது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக இப்படி பொய்களை கட்டவிழ்த்து விடுகிறதா? என்றும் தெரியவில்லை.
எது உண்மையோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: சிவசங்கர் பேட்டி!