பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ( ஆகஸ்ட் 23) முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதனை உடனடியாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில், மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 21, 2002-ஆம் ஆண்டு 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தநிலையில், 11 பேரும் கோத்ரா கிளை சிறையிலிருந்து, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் 15 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்ததால், தண்டனை குறைப்புச் சட்டத்தின் படி விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது,

குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை வெளிப்படுத்தியது.
குற்றவாளிகள் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து, இனிப்புகள் வழங்கி பாஜக-வினர் அவர்களை வரவேற்றனர்.
இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் அபர்ணா பத் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
செல்வம்
சிறப்புக் கட்டுரை: மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!
