“வயசு வெறும் நம்பர்தான் பாஸ்!” – 87 வயதில் ஸ்கூட்டரில் கெத்து காட்டும்’ பைக்கர் பாட்டிகள்’! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

biker dadis ahmedabad 87 year old mandakini shah scooter ride viral video

பொதுவாக 80 வயதைத் தாண்டிவிட்டாலே, “எழுந்து நடமாடவே கஷ்டம், ஒரு இடத்தில உட்கார்ந்து ஓய்வெடுப்போம்” என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு மூதாட்டிகள், “வயசானால் என்ன? மனசு இளமையா இருக்கே!” என்று நிரூபித்து, இளைஞர்களுக்கே சவால் விட்டு வருகின்றனர்.

இணையத்தில் இப்போது இவர்களை “பைக்கர் தாதிஸ்” (Biker Dadis) என்று அன்போடு அழைக்கிறார்கள்.

ADVERTISEMENT

யார் இந்த சூப்பர் பாட்டிகள்? குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள் மந்தாகினி ஷா (Mandakini Shah) மற்றும் உஷாபென் (Ushaben). இதில் அக்கா மந்தாகினிக்கு வயது 87, தங்கை உஷாபெனுக்கு வயது 84.

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் (https://x.com/i/status/1998326977036796150), மந்தாகினி பாட்டி கூலாக ஸ்கூட்டர் ஓட்ட, அவருக்கு அருகில் இணைக்கப்பட்டுள்ள சைட்காரில் (Sidecar) தங்கை உஷாபென் ஜாலியாக அமர்ந்து வரும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அகமதாபாத்தின் நெரிசலான டிராஃபிக்கில் கூட, எந்தப் பதற்றமும் இல்லாமல் நேர்த்தியாக வண்டியை ஓட்டிச் செல்கிறார் இந்த 87 வயது ‘இளம்’ பெண்மணி.

ADVERTISEMENT

‘சோலே’ பட ஸ்டைலில் ஒரு ரவுண்ட்: பாலிவுட்டின் ஐகானிக் படமான ‘சோலே’வில் வரும் ஜெய் – வீரு (Jai and Veeru) போல, இந்தச் சகோதரிகள் இருவரும் காட்டன் புடவை அணிந்துகொண்டு நகரத்தைச் வலம் வருவது பார்க்கவே அழகாக இருக்கிறது.

62 வயதில் தான் டிரைவிங்கே கத்துக்கிட்டாராம்! சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகளான மந்தாகினி, முன்னாள் ஆசிரியை. சிறுவயதிலேயே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வசதி இல்லாததால் அது நடக்கவில்லை. ஆனால், அதற்காக அவர் அந்த ஆசையை விட்டுவிடவில்லை. தனது 62-வது வயதில் தான் அவர் ஸ்கூட்டர் ஓட்டவே கற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

“எனக்கு நடப்பதற்கு ஊன்றுகோல் (Stick) தேவைப்படுகிறது. ஆனால், ஸ்கூட்டர் ஓட்டும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. என் மன உறுதிதான் (Willpower) என்னை ஓட்ட வைக்கிறது,” என்கிறார் மந்தாகினி. இவர் ஸ்கூட்டர் மட்டுமல்ல, ஜீப் ஓட்டுவதிலும் கில்லாடியாம்!.

ஊருக்கே இன்ஸ்பிரேஷன்: “நான் போகும்போது பலரும் என்னை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். மருத்துவமனைக்குச் சென்றால், டாக்டர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு கட்டணம் கூட வாங்குவதில்லை,” என்று சிரிக்கிறார் மந்தாகினி.

இவரைப் பார்க்கும் ஆண்கள், தங்கள் மனைவிகளிடம் “அந்தப் பாட்டியைப் பார், நீயும் பயப்படாமல் வண்டி ஓட்டக் கற்றுக்கொள்” என்று கூறுவதாகச் சொல்கிறார் மந்தாகினி. தான் செல்லும் வழியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், முன்பின் தெரியாதவர்களுக்கும் லிஃப்ட் கொடுத்து உதவுகிறார் இவர்.

மொத்தத்தில்… “ஏன் இந்த வயதில் ஓட்டுகிறீர்கள்?” என்று கேட்டால், “ஏன் கூடாது?” (Why not?) என்று இவர் கேட்கும் கேள்வி தான், சோம்பேறித்தனத்துடன் இருக்கும் பலருக்கான சவுக்கடி. கனவுகளைத் துரத்த வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு இந்த ‘பைக்கர் பாட்டிகள்’ ஒரு வாழும் சாட்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share