இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முகவர்கள் ஷோரூம் விலைக்கு விற்பனை செய்யாமல் இன்சூரன்ஸ், டெலிவரி கட்டணம் என்று கூடுதலாக பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பது நாம் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இரு சக்கரம், நான்கு சக்கரம், கனரக வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் & ஹைப்ரிட் வாகனங்கள் என ஆண்டுக்கு 20 லட்சம் வாகனங்கள் விற்பனையாகிறது. இவை 145 வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் (பகுதி) மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதில் 90 சதவிகிதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாவதாகவும், ஆண்டுதோறும் இந்த விற்பனையானது 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் சொல்கிறார்கள் ஆர்டிஒ அதிகாரிகள்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களை உழைக்கும் வர்க்கத்தினர், கல்லூரி மாணவர்கள், நடுத்தர மக்கள் தான் அதிகளவில் வாங்கி பலன் பெற்று வருகிறார்கள்.
இவர்களிடம் தான் முகவர்கள் பலவிதமான கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. இதன் உண்மைத் தன்மையை ஆராய, கார் பைக் ஷோரூம்களுக்கு சென்று நண்பர்கள் பெயரில் அட்வான்ஸ் கொடுத்து கொட்டேஷன் வாங்கினோம்.
தமிழகத்தில் உள்ள சில டொயோட்டா கார் ஷோரூமுக்கு சென்று கொட்டேஷன் கேட்டோம். அவர்கள் அளித்த கொட்டேஷனில் Ex. Showroom price ரூ.26,11,500, இன்சூரன்ஸ் ரூ.1,27,607 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதே இன்சூரன்ஸ்- சை நேரடியாக பொதுத்துறை அல்லது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செய்தால் ரூ.68,178 தான் வருகிறது. ஆனால், ஷோரூமில் கூடுதலாக ரூ.59,429 வசூலிக்கின்றனர்.
மேலும், எஞ்சினுக்கு கூடுதல் வாரன்டி என்று ரூ.44,060 கட்டணம் வசூலிகின்றனர். சில ஷோரூம்களில் அசசரிஸ் மற்றும் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.
கடலூர் SRI VMS BIKES ஷோரூமுக்கு சென்று யமகா MT15 மாடலுக்கு கொட்டேஷன் கேட்டோம். எக்ஸ். ஷோரூம் விலை ரூ.1,70,189, இன்சூரன்ஸ் ரூ.13,058 , சாலை வரி பதிவு கட்டணம் ரூ.21,473 ரூபாய், டெலிவரி கட்டணம் ரூ.4,780 என மொத்தம் ரூ.2,09,500 செலுத்த சொன்னார்கள்.
அவர்களிடம் “இன்சூரன்ஸ் நாங்கள் வெளியில் போட்டுக்கிறோம்” என்றோம்.
உடனே “வெளியெல்லாம் இன்சூரன்ஸ் போட முடியாது. இந்த விலைக்கு வண்டி வேணும்னா எடுங்க… இல்லைண்ணா வெளிய போங்க” என்று அதட்டலாக பேசினர்.
இதுகுறித்து டீலர் உரிமையாளரை சந்தித்து முறையிட்டால், “இது ஷோரூம் நாம்ஸ் சார்… நாங்க ஒண்ணும் பண்ண முடியாது” என்றார்.
இதேபோல் பைக் மற்றும் கார் போன்ற பத்து டீலர்களிடம் கொட்டேஷன் வாங்கி பார்த்தோம். அனைவரும் ஒரே மாதிரியான முறையில் தான் அதிக கட்டணம் வசூலித்தனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க கடலூர் RTO அருணாசலத்தை தொடர்பு கொண்டபோது, அவர் நம் அழைப்பை எடுக்கவில்லை.
பின்னர், மோட்டார் வாகன ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு, பைக்- கார் டீலர்கள் மக்களிடம் கட்டாயமாக இன்சூரன்ஸ் போட சொல்கிறார்கள், எஞ்சினுக்கு கூடுதல் வாரன்டி, டெலிவரி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரிவித்தோம்.
அதற்கு அவர், “தமிழகத்தில் பெரும்பாலும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சாதி சங்கத்தினர் தான் ஷோரூம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஷோரூமுக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க போனால் எங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்” என்றார் பரிதாபமாக.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளையும், டீலர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றியும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாம் சொன்னதை கவனமாக குறிப்பு எடுத்துக் கொண்டார்.
“உடனடியாக போக்குவரத்துத் துறை ஆணையரிடம் தகவல் சொல்லி எச்சரிக்கையும் நடவடிக்கையும் எடுக்கச் சொல்கிறேன்” என்றார்.
அப்பாவி மக்களை ஏமாற்றி அதிகமாக பணம் பிடுங்கும் டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்”: பிரதமர் மோடி புகழாரம்!
ஆவணி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)