பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் அம்பேத்கர் விடுதிக்கு சென்று மாணவர்களுடன் உரையாட முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பீகாரில் பாஜக, ஜேடியூ கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ்- ஆர்ஜேடி, இடதுசாரிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பீகார் தேர்தல் நெருங்குவதாலேயே பிரதமர் மோடி தொடர்ந்து அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்ததும் பீகார் தேர்தலுக்குதான் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி ஒற்றுமையாக நின்று களத்தை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பின்னணியில் இன்று பீகார் மாநிலம் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் மாணவர்களிடையே கலந்துரையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வேறு ஒரு இடத்தை ஒதுக்கியது. இதனை காங்கிரஸ் கட்சியினர் ஏற்கவில்லை.
இருப்பினும் திட்டமிட்டபடி மாணவர்களை சந்திக்க அம்பேத்கர் விடுதிக்கு செல்ல முயன்றார் ராகுல் காந்தி. அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , பீகாரில் நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றார்.
