பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அனல் பறந்த பிரச்சாரம் இன்று (நவம்பர் 4, 2025) மாலையுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு, 121 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் நவம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகாரில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் 3.92 கோடி ஆண்கள் மற்றும் 3.5 கோடி பெண்கள் அடங்குவர். 14 லட்சம் முதல் முறை வாக்காளர்களும், 4 லட்சம் மூத்த குடிமக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 03 அன்று
- ரூ.9.62 கோடி ரொக்கம்
- ரூ.42.14 கோடி (9.6 லட்சம் லிட்டர்) மதிப்புள்ள மதுபானம்
- ரூ.24.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்
- ரூ.31 கோடி மதிப்புள்ள பொருட்கள் உட்பட மொத்தம் ரூ.108.19 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல்களின் போது பணம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் பல சட்டவிரோத பரிமாற்றத்தை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின் போது சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
இசிஐநெட் தளத்தில் உள்ள சி-விஜில் செயலியைப் பயன்படுத்தி குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களைப் பதிவுசெய்யலாம். 1950 என்ற உதவி எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.










