குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளை மக்கள் ஆதரிப்பது ஏன்? மக்களின் எந்தத் தேவையை அவர்கள் பூர்த்திசெய்கிறார்கள்? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
அர்க்யா பாஸ்கர் & ரிதின்
பீகார் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்நோக்கும் நிலையில், மாநில வாக்காளர்கள், சாதி அடிப்படையில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், வேலைவாய்ப்பு அல்லது வளர்ச்சி போன்ற விஷயங்களுக்குக் குறைந்த கவனம் செலுத்துகிறார்கள் என்ற வழக்கமான கருத்துகள் உலா வருகின்றன. ஆனால், மக்கள் இந்த வழக்கமான முத்திரைகளைத் தாண்டி, மிகவும் திட்டமிட்ட வகையில் தங்கள் தேர்வுகளைச் செய்கிறார்கள் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
வாக்காளர்கள் சில சமயம் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்கள். ஏனெனில், அவர்களால் வேலைகளைச் செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். சாதி அடிப்படையிலான ஒரு கட்சி கறை படிந்த முகங்களை நிறுத்தினால், அந்தக் கட்சியின் மீதுள்ள விசுவாசம் மங்கிவிடுகிறது. வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில்தான் பொதுமக்களின் குறைகளைக் கவனித்துச் செயல்படுகிறார்கள்.
பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வில் ஈடுபடும் அபினவ் கேம்கா கடந்த டிசம்பரில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தக் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. ‘இந்திய ஜனநாயகத்தில் அரசியலில் குற்றச்செயல், வம்சாவளி அரசியல், நிர்வாகத்தின் இயக்கவியல்’ (Dynamics of Political Criminality, Dynasties, and Governance in Indian Democracy) என்ற தலைப்பில் வெளிவந்த இந்த ஆய்வு முதன்மையாகப் பீகாரில் கவனம் செலுத்துகிறது. நவம்பர் 6, 11 தேதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த மாநிலம் தயாராகிவரும் நிலையில் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
பீகாரின் அரசியல் நீண்ட காலமாக அதன் “வலிமையான மனிதர்களின் சகாப்தத்தின்” பிடியில் இருந்துவருகிறது. 1970களில், ‘வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றும் வலிமை கொண்டவர்கள்’ உயரடுக்கில் உள்ள சாதியினருக்காக வேலை செய்வதை நிறுத்திவிட்டுத் தங்களுக்காக அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்கியபோது இந்தப் போக்கு பிறந்தது. இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்தல் களத்தில் இறங்கினார்கள். இது தேர்தல் களத்தின் வடிவத்தை மாற்றியமைத்தது.
அரை நூற்றாண்டுக்குப் பிறகு, பீகார் மற்றொரு தேர்தலை நோக்கிச் செல்லும் நிலையில், வலிமை வாய்ந்த அந்தக் குழுக்களுடன் தொடர்புடைய பல குடும்பங்கள் மாநிலத்தின் அரசியல் கட்டமைப்பில் இன்னமும் பின்னிப் பிணைந்துள்ளன.
பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி தர்மபால் சின்ஹா 1997ஆம் ஆண்டு பட்னா மாநகராட்சியில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்னும் நிலையை விவரிக்க, “ஜங்கில்ராஜ்” (காட்டாட்சி) என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அந்தக் காட்டாட்சியின் பிடியிலிருந்து பீகார் இன்னமும் விடுபடவில்லை என்ற கருத்து தொடர்ந்து நிலவுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு யாதவ் தலைமையிலான அரசில் சட்டம்-ஒழுங்கு மோசம் என்று விமர்சிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இந்தச் சொல்லை ஆவலோடு பற்றிக்கொண்டன. உண்மை என்னவென்றால், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளால்தான் ‘வேலைகளைச் செய்து முடிக்க முடியும்’ என்று வாக்காளர்கள் நம்புகிறார்கள் என்று கேம்காவின் கட்டுரை தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஃப்ரன்ட்லைன் இதழ், முந்தைய 20 நாட்களில் பீகாரில் 50 கொலைகள் நடந்துள்ளதாகத் தன் கட்டுரையொன்றில் குறிப்பிட்டது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலையான ஆதரவாளர்களாக நீண்ட காலமாகப் பார்க்கப்பட்ட மாநிலத்தின் வணிகச் சமூகம், பட்னாவின் முக்கிய வணிகர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட மறுநாள், ஜூலை 8 அன்று கோபத்துடன் வீதிக்கு வந்தது. கடைகள் அடைக்கப்பட்டன, மாவட்டங்கள் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன.
குற்றவாளிகளுக்கு எதிரான கோபம்
குற்றங்கள் நிறைந்த சூழலுக்கும் அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களுக்கும் எதிராகக் குடிமக்கள், ஆர்வமுள்ள குழுக்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்குக் கோபம் இருந்தாலும் இந்தக் கோபம் தேர்தலில் பிரதிபலிப்பதில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது பீகார் சட்டமன்றத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 70% பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். 2005ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 29% ஆக இருந்தது. இவர்களில் 50% சட்டமன்ற உறுப்பினர்கள் கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, 2020 பீகார் தேர்தலில் போட்டியிட்ட 3,722 வேட்பாளர்களில் 1,201 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளமும் பாரதிய ஜனதா கட்சியும் நிறுத்திய வேட்பாளர்களில் 70% பேர்மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த விகிதம் காங்கிரசில் 64%, லோக் ஜனசக்தி கட்சியில் 52%, ஐக்கிய ஜனதா தளத்தில் 49%, பகுஜன் சமாஜ் கட்சியில் 37% என்பதாக உள்ளது.
கடந்த ஆண்டு பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்ட பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சி நிறுத்திய நான்கு வேட்பாளர்களில் மூன்று பேர் மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள். இந்த முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காக, கேம்கா 2022 ஜனவரிமுதல் ஏப்ரல்வரை பீகாரின் சீதாமர்ஹி, முசாபர்பூர் மாவட்டங்களில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 2,000 வாக்காளர்களிடம் கள ஆய்வை மேற்கொண்டார்.
குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்த தொகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான வேலை ஒதுக்கீடு, அந்த வேலைகளின் நிலவரம் ஆகியவை பற்றிய ஆய்வையும் நடத்தினார். தன் ஆய்வில் பொதுமக்கள் தெரிவித்த குறைபாடுகளை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், வம்சாவளியைச் சேராதவர்கள் ஆகிய இரு விதமான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி, அவர்களின் பதில்களைப் பெற்றார்.
இந்த ஆய்வு இரண்டு முக்கியக் கேள்விகளில் கவனம் செலுத்துகிறது என்கிறார் கேம்கா. வாக்காளர்கள் ஏன் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்களைப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் விளைவு என்ன ஆகியவையே அந்தக் கேள்விகள்.
பதிலளித்த மக்களில் 39% பேர் மட்டுமே தொடர்ந்து செய்திகளைப் பார்ப்பதாகத் தெரிவித்தாலும், 43% பேர் உயர் மட்ட அரசியல் அறிவை வெளிப்படுத்தினார்கள். ஆய்வில் பங்கேற்றவர்கள் கிரிமினல் வேட்பாளர்களைக் கடுமையாகக் கண்டித்தார்கள், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை அறிந்திருந்தார்கள்.
கேம்காவின் ஆய்வு இவ்வாறு வாதிடுகிறது: “அரசு நிறுவனங்களும் அரசும் அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாத சூழல்களில், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து, பொதுத் திட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறார்கள். அவற்றை வழங்குவதையே வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது, கிராமப்புறக் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 100 நாட்கள் உடல் உழைப்பை உறுதி செய்யும் தேசிய அளவிலான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். திட்டத்திற்கான ஒதுக்கீடு, திட்டப்பணி நிறைவேற்றம் ஆகியவை தொடர்பான மதிப்பீட்டில், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில், திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட விகிதம் 68% குறைந்துள்ளது என்பதைக் கேம்கா கண்டறிந்தார். ஆனால், வேலை ஒதுக்கீட்டின் விகிதம் 36% அதிகரித்துள்ளது.
இந்த அரசியல்வாதிகள் பொதுவாகப் பொருட்களை வாங்குவதைவிடத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக நிதியை ஒதுக்கும் நலத்திட்டங்களைக் குறிவைக்கிறார்கள். MGNREGA போன்ற திட்டங்கள் — அதன் பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 60% ஊதியத்திற்காகச் செலவிடப்பட வேண்டும் — வாக்காளர்கள் தெளிவாகப் பார்க்கக்கூடிய வேலைகளை உருவாக்க அனுமதிக்கிறது.
பரவலாக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், இந்த ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலன்களுக்குச் சேவை செய்யும் திட்டங்களுக்கு ஆணையிட முடிகிறது. பெரும்பாலும் லஞ்சம் அல்லது ஆள்பலம் மூலம் அதிகாரிகள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் மீது அழுத்தம் கொடுத்து, தாங்கள் விரும்பும் வழியில் திட்டங்களை வடிவமைக்கிறார்கள்.

மனித உழைப்பை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அரசியல்வாதிகள் அதிக மனித-நாட்களின் வேலைவாய்ப்பை உருவாக்க நிதியின் ஒரு பெரிய பங்கைப் பயன்படுத்த முடியும். இது அந்தத் தொகுதியின் வாக்காளர்களிடையே நல்லெண்ணத்தைப் பெற உதவுகிறது.
குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தங்கள் வாக்காளர்களுடன் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் வளர்த்துக்கொள்வதுபோன்ற உறவை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். வேட்பாளர் திறமையானவராகத் தோன்றினால், வாக்காளர்கள் குற்றச் செயலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்கிறார் கேம்கா.
பீகாரில் குற்றப் பின்னணி கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வளர்ந்துவருவதற்கு வித்திடும் இரண்டு சக்திகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்: பணம், செல்வாக்கு. தேர்தல் களங்கள் கட்சிகளின் வாய்வீச்சையும் வசதிகளையும் பொறுத்ததாக இருக்கும் ஒரு மாநிலத்தில், பசையுள்ள கட்சிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தாங்கள் விரும்பிய திட்டங்களை முன்னோக்கி நகர்த்தத் தூண்டுவதுவரை அனைத்தையும் எளிதாக்க முடியும்.
இந்தச் சூழலில், குற்றச் செயல் திறமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது என்று கேம்கா குறிப்பிடுகிறார். “குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தங்கள் அதிகப்படியான செல்வத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்துவது மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரங்களுக்காக அதிகம் செலவழிக்கவும் முடியும்” என்கிறார்.
“இந்தியாவில் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள், தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும், தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டிய வளங்களை வழங்கவும் சட்டத்தை மீறிச் செல்லத் தயாராக இருக்கும் திறமையான, வலிமையான மனிதர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் ஆய்வுகள் நிறைய உள்ளன” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வில் நடத்தப்பட்ட சோதனைகளும் பீகாரின் வம்சாவளி சட்டமன்ற உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகின்றன. மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வாக்காளர்களின் கவலைகளுக்கு 4% சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பதிலளித்தனர். வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், வம்சாவளி அல்லாதவர்களை விட 6.8% குறைவாகவே பதிலளித்தனர். ஒரு அரசியல்வாதிக்கு அரசியல் பின்புலமுள்ள பெற்றோர் அல்லது மனைவி இருந்தால், பதிலளிப்பு விகிதம் மேலும் குறைந்தது. தேர்தல் ரீதியாகத் தெளிவான பலன் இருக்கும்போது மட்டுமே அவர்கள் செயல்படத் தயாராக இருப்பதுபோல் தெரிந்தது.
இந்த ஆய்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களை ஒரே சாதிப் பிரிவாகக் கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும், இந்தச் சமூகங்கள் மக்கள்தொகையில் 36% இருப்பதால், இவை பீகாரில் மிகப்பெரிய பிரிவாக உருவாகின்றன. இந்த ஆய்வு வாக்காளர்களை அப்பாவிகள் அல்லது விவரம் அறியாதவர்கள் என்ற கருத்தை மாற்றி, அவர்களை மிகுந்த யோசனையுடன் வாக்களிப்பவர்களாகச் சித்தரிக்கிறது.
மாநிலத்தின் அரசியல் பொருளாதாரம், பாகுபலிகள் அல்லது வலிமையான மனிதர்கள் என்று பிரபலமாக அறியப்படும் சுயநலவாதிகளின் பிடியில் உள்ளது என்று கேம்கா வாதிடுகிறார். அவர்களின் சாம்ராஜ்யங்கள் சட்டமன்றக் கூடங்களில் அல்ல, சட்டவிரோத மதுபான நெட்வொர்க்குகள், மணல் சுரங்க மோசடிகள், விவாதிக்கப்பட்ட நில ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் நிழல்களில் கட்டப்பட்டுள்ளன. இந்த வலிமையான மனிதர்கள் காலப்போக்கில் புதிய அரசியல் வர்க்கமாக வளர்ந்துள்ளனர். அவர்களின் நிழலான விவகாரங்களிலிருந்து வரும் பணத்தைத் நலத் திட்டங்கள், சேவை வழங்கல், தேர்தல் ஆதிக்கம் என்னும் தெளிவான அதிகார வடிவங்களாக மாற்றியுள்ளனர்.
பீகார் மாநிலம் தேர்தலை எதிர்நோக்கும் இன்றைய நிலையில் பணமும் செல்வாக்கும் வலிமையும் இணைந்த இந்தக் கட்டமைப்பு தேர்தலில் ஆதிக்கம் செலுத்துமா என்பதே நம் முன் உள்ள கேள்வி.
அர்க்யா பாஸ்கர் சுயாதீனப் பத்திரிகையாளர். ரிதின் ஜார்க்கண்டில் உள்ள பல்துறை ஆராய்ச்சியாளர்.
நன்றி: ஸ்க்ரால் இனைய இதழ்
