பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏக்களும் ‘கூண்டோடு’ எடுத்திருக்கும் முடிவால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கோலோச்சிய காலம் மலையேறிவிட்டது. 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் கட்சி தலைமை நடத்தும் நிகழ்ச்சிகளை 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ’கூண்டோடு’ தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களும் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சிக்கு தாவப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் தேர்தலில் ஜெயித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ஜேடியூ கட்சிக்கு தாவினால் அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பரிதாப நிலை ஏற்படும். இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
