பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா? என கேட்டு மர்ம நபர் ஒருவர் தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக்பாஸ் என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. நேற்று இரவு என்னை தாக்கியது யார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். அவர் தன்னை பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என சொல்லி கொண்டார்.
https://twitter.com/vanithavijayku1/status/1728618705842807039
நான் என்னுடைய பிக்பாஸ் விமர்சனம் நிகழ்ச்சியை முடித்து விட்டு வந்தேன். இரவு உணவு சாப்பிட்டு விட்டு என்னுடைய சகோதரி சௌமியா வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுப்பதற்காக வந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நபர் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற பண்றியா? என கேட்டு என்னை மிகவும் மோசமாக தாக்கினார்.
அவர் தாக்கியதில் என் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அருகில் யாரும் இல்லை. அதற்கு பின் என் சகோதரிக்கு போன் செய்து முதலுதவி செய்து கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என என் சகோதரி கூறினார். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். அந்த நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.
திரையில் தோன்றும் அளவுக்கு நான் உடல் நலத்துடன் இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் ஓய்வு எடுத்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் தான் உள்ளது என்று சொல்லி கொள்கிறேன்,” என தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா